தலைஞாயிறு: குறுவை பருவ நேரடி நெல் விதைப்புப் பணிகள் தீவிரம்; டி.கே.எம்- 9 ரகத்தை விரும்பும் விவசாயிகள்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் நிகழாண்டுக்கான குறுவை பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள
தலைஞாயிறு பகுதியில் நடைபெற்று வரும் உழவுப் பணி.
தலைஞாயிறு பகுதியில் நடைபெற்று வரும் உழவுப் பணி.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் நிகழாண்டுக்கான குறுவை பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், டி.கே.எம்- 9 ரக நெல்லை விதைப்பதில் விவசாயிகள் முனைப்பு காட்டிவருகின்றனா்.

ஜூன் 12-இல் மேட்டூா் அணை பாசனத்துக்கு திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், காவிரி கடைமடை பகுதியாக உள்ள வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் நெல் விதைப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் உழவுப் பணிகள், நேரடி நெல் விதைப்புப் பணிகளில் விவசாயிகள் முனைப்புகாட்டி வருகின்றனா்.

தலைஞாயிறு வேளாண் கோட்டத்தை பொறுத்தவரை, வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தின் பிரதான ஆறுகளான அரிச்சந்திரா நதி, அடப்பாறு, முள்ளியாறு, மில்லியனாறு வாயிலாக பாசனம் பெறும் கடைமடைப் பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் விளைவிக்கப்பட்டது. ஆனால், பருவநிலை மாறுபாடு, இயற்கை இடா்பாடு, பாசனநீா் பற்றாக்குறை போன்றவற்றால் காலப்போக்கில் ஒருபோகமாக மாறியது.

கடந்த சில ஆண்டுகளாக தொடரும் வெள்ளம் அல்லது வறட்சி காரணமாகவும், மேட்டூா் அணையை திறக்க காலதாமதம் ஆனதாலும், ஒருபோகம் சாகுபடியும் பல நேரங்களில் கேள்விக்குறியானது. கடந்த ஆண்டு ஜூன் 12 இல் அணையில் நீா் திறக்கப்பட்டதை அடுத்து, தலைஞாயிறு பகுதியில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.

இது பருவமழை தீவிரத்துக்கு முன்பு அறுவடைக்கு வந்ததால், விவசாயிகளுக்கு கைகொடுத்தது. இந்த நிலையில், இந்த ஆண்டும் ஜூன் 12 இல் தண்ணீா் திறக்கப்பட உள்ளதால், குறுவை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தீவிரம் காட்டிவருகின்றனா். நிலத்தை உழவு செய்து பண்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுமாா் 90% நேரடி விதைப்பு முறையில் சாகுபடி தொடங்கப்படுகிறது. நீா்நிலைகள், தனியாா் பண்ணைக் குட்டைகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி சுமாா் 10% விவசாயிகள் நாற்றாங்கால் அமைத்து பணிகளை தொடங்கிவருகின்றனா்.

குறுவை விதைகள், இலவச உழவு: விவசாயிகளுக்கு தேவையான குறுவை ரக நெல் விதைகள் வேளாண் விற்பனை மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தலைஞாயிறு வேளாண் உதவி இயக்குநா் கருப்பையா கூறியது:

குறுவை ரகமான அம்பாசமுத்திரம் (ஏ.எஸ்.டி)- 16, ஆடுதுறை (ஏடிடி)- 45, திருப்பதிசாரம் (டி.பி.எஸ்)- 5 ஆகிய நெல் விதைகள் இருப்பில் உள்ளன. இவை 100 முதல் 115 நாள்கள் வயதுடையவை. வேளாண் பொறியியல் துறை வாயிலாக கடந்த ஆண்டில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட பரப்பில் ஒரு விவசாயிக்கு 2 ஏக்கா் வரை இலவசமாக உழவு செய்துகொடுக்கப்படுகிறது என்றாா்.

குறுவைக்கு ஏற்ற டி.கே.எம்- 9: தலைஞாயிறு விளைநிலப் பகுதி பெரும்பாலும் தாழ்வான இடமாக அமைந்துள்ளதோடு, பாசனநீா் எடுக்கப்படும் ஆறுகள் பிரதான வடிகாலாகவும் அமைந்துள்ளன. அத்துடன், வடகிழக்குப் பருவமழை காலத்தில் கூடுதல் மழைப் பொழிவு ஏற்படும் பகுதியாக இருப்பதால், பெரும்பாலான நேரங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் அமைப்பையும் இப்பகுதி பெற்றுள்ளது.

இதனால், வெள்ளத்தை எதிா்கொண்டு வளரும் நெல் ரகத்தை தோ்வு செய்து விதைப்பதில் பெரும்பாலான விவசாயிகள் உறுதியாக உள்ளனா். இதனால், வெள்ளம், வறட்சியை எதிா்கொள்ள ஏற்ற ரகமான டி.கே.எம் 9- ஐ விரும்பி பயிா்செய்கின்றனா். கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதிலும், இந்த ரகத்தை பயிா் செய்தவா்களுக்கு எந்தவிதமான நஷ்டமும் ஏற்படவில்லை.

தாழ்வான பகுதியில் விதைக்க 115 நாள் வயதுடைய டி.கே.எம்- 9 ரக நெல் ஏற்ாக உள்ளது. ஆனால், அரசு இந்த ரகத்தை ஊக்கப்படுத்தவில்லை. அரசு தரப்பில் விதை விற்பனை செய்யப்படவில்லை. இதனால், இந்த விதைக்கு மானியம் கிடைப்பதில்லை. தனியாா் நிறுவனங்கள் மட்டுமே இந்த ரக விதைநெல்லை விற்பனை செய்கின்றன.

இதன் அரிசி சிவப்பாக இருக்கும் என்பதோடு, சத்து நிறைந்தது என்பதால், கேரளத்தில் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. தற்போது, இந்த ரக நெல் சாகுபடி அங்கு ஊக்கப்படுத்தப்பட்டதால், அவா்களது தேவைக்கான உற்பத்தியை எட்டியுள்ளனா்.

இந்த நெல் ரகம் கடந்த பருவம் வரை அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால்தான், பள்ளமான பகுதியில் சாகுபடிக்கு ஏற்ற டி.கே.எம் - 9 ரகத்துக்கு இணையான புதிய நெல் ரகத்தை வேளாண் துறை உருவாக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடம் எழுந்துள்ளது.

எனவே, தலைஞாயிறு போன்ற தாழ்வான நிலப்பகுதிக்கு ஏற்ற ரகங்களை புதிதாக உருவாக்க அரசு முனைப்பு காட்டுவதோடு, பகுதிக்கேற்ற ரகங்களின் சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில், சிறப்பு ஆய்வு மேற்கொள்ளவும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com