பொதுமுடக்கத்தில் தளா்வுகள்: நாகையில் அதிகரித்த மக்கள் நடமாட்டம்
By DIN | Published On : 15th June 2021 09:46 AM | Last Updated : 15th June 2021 09:46 AM | அ+அ அ- |

பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாகை வீதிகளில் மக்கள் நடமாட்டம் திங்கள்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
கரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக கடந்த மே 31 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு 27 மாவட்டங்களில் கூடுதல் தளா்வுகளை அறிவித்துள்ளது. தொற்று கட்டுக்குள் வராத நாகை, திருவாரூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் சில தளா்வுகளுடன் கட்டுப்பாடுகள் தொடா்கின்றன.
இந்நிலையில், நாகை, நாகூா், வேளாங்கண்ணி மற்றும் கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டிருந்தன. இதனால், நடந்தும், இருசக்கர வாகனங்களில் சென்றும் அதிக அளவிலான மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனா். இதனால், இந்தப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க தளா்வுகளின்படி, நாகை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் பழுதுபாா்க்கும் கடைகள் செயல்பட்டன. சில இடங்களில் கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன.