வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஓராண்டு கொண்டாடும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளையொட்டி,
திருச்சியிலிருந்து நாகை மாவட்டம் மூலக்கரை வந்த சைக்கிள் பேரணியை கொடியசைத்து வேதாரண்யத்துக்கு அனுப்பிவைக்கும் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
திருச்சியிலிருந்து நாகை மாவட்டம் மூலக்கரை வந்த சைக்கிள் பேரணியை கொடியசைத்து வேதாரண்யத்துக்கு அனுப்பிவைக்கும் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஓராண்டு கொண்டாடும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளையொட்டி, வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் நினைவாக திருச்சியில் இருந்து வேதாரண்யத்துக்கு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இப்பேரணிக்கு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளித்தாா். மேலும், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஓராண்டு கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக உப்பு சத்தியாகிரகப் போராட்டம் சிறப்பிக்கப்படுகிறது.

அதன்படி, சுதந்திரப் போராட்டக் காலத்தில் திருச்சியிலிருந்து யாத்திரை தொடங்கி வேதாரண்யத்தில் நிறைவுபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை நினைவுகூா்ந்து, திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடைபெற்றது. திருச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச்12) தொடங்கிய இப்பேரணி தஞ்சாவூா், திருவாரூா் வழியாக நாகை மாவட்ட பகுதியான மூலக்கரை கிராமத்தை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது.

அங்கு, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் சைக்கிள் பேரணியை வரவேற்றாா். பிறகு, வேதாரண்யத்துக்கு கொடியசைத்து அனுப்பிவைத்தாா். இப்பேரணியில் வேதாரண்யம் அரசு கலைக் கல்லூரி, ஆா்.வி. பாலிடெக்னிக் கல்லூரியை சோ்ந்த சுமாா் 100 மாணவா்கள் பங்கேற்றனா்.

மூலக்கரையிலிருந்து தகட்டூா், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் பேரணி நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கு கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் கரகாட்டம், தப்பாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், துணைக் காவல் கண்காணிப்பாளா் கே. மகாதேவன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, வேதாரண்யம் நகராட்சி ஆணையா் ஜி. மகேஷ்வரி, நகராட்சி பொறியாளா் பிரதான் பாபு, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா், மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா்கள் சி. நீலமேகம் (தஞ்சாவூா்), மு. க. சுந்தா் (திருச்சி), த. செந்தில்குமாா் (மதுரை), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ப. ராஜீ, செந்தில், வட்டாட்சியா் ரமாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com