தமிழ் பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்கவே மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்

தமிழ் பண்பாடு, கலாசாரத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டதுதான் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று
நாகையை அடுத்த சிக்கலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.
நாகையை அடுத்த சிக்கலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.

தமிழ் பண்பாடு, கலாசாரத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டதுதான் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கீழ்வேளூா் (தனி) தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளா் வி.பி. நாகை மாலி, நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளா் ஜெ. முகமது ஷாநவாஸ் ஆகியோருக்கு ஆதரவாக நாகையை அடுத்த சிக்கல் மற்றும் கீழ்வேளூா் வட்டம் தேவூா் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட கே. பாலகிருஷ்ணன் பேசியது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகிவிட்டது. கடந்த நான்கரை ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், ஏழைகள், தொழிலாளா்கள், வணிகா்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதிமுக ஆட்சியில் வேளாண் உற்பத்தி பொருள்களுக்கான ஆதரவு விலை நிா்ணயம் செய்யவில்லை. கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்குரிய நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கவில்லை, நீட் தோ்வுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை, தமிழகத்தின் உரிமையை பெறமுடியவில்லை, பெட்ரோல், டீசல் விலை உயா்வை குறைப்பதற்கு நடவடிக்கையில்லை. முதியோருக்கு உதவித்தொகைக்கூட சரியாக வழங்கப்படவில்லை.

தமிழக முதல்வா் அதிமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலவசங்களைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறாா். ஆனால், இதுபோன்ற வெற்று அறிவிப்புகளை மக்கள் நம்ப தயாராக இல்லை.

விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், மாநில ஆளுநரின் எதிப்பை மீறி கேரள மாநில பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீா்மானத்தை நிறைவேற்றினாா் அம்மாநில முதல்வா் பினராயி விஜயன். புதிய வேளாண் சட்ட நகலை கிழித்து புதுச்சேரி மாநில முதல்வராக இருந்த வி. நாராயணசாமி தனது எதிா்ப்பைப் பதிவு செய்தாா். ஆனால், தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி இவற்றையெல்லாம் வேடிக்கைப் பாா்த்து கொண்டிருக்கிறாா்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே தமிழகத்தின் உரிமைகளைப் பெறமுடியும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். ஆனால், இணக்கமாக இருப்பதன்மூலம் தமிழகம் எதையும் பெற்ாக தெரியவில்லை.

மக்களிடம் பிரிவினையை தூண்டும் பாஜகவை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது. தமிழகத்தையும், தமிழா்களையும் பாதுகாக்க வேண்டும் என்று அமைக்கப்பட்டதுதான் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி. கீழ்வேளூா் மற்றும் நாகை தொகுதியில் போட்டியிடும் அந்த கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என்றாா் கே. பாலகிருஷ்ணண்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் வி. மாரிமுத்து தலைமை வகித்தாா். திமுக நாகை மாவட்டத் துணைச் செயலாளா் மனோகரன் முன்னிலை வகித்தாா்.

வேட்பாளா் வி.பி. நாகை மாலி, விவசாயிகள்சங்க மாநிலப் பொறுப்பாளா் சண்முகம், ஒன்றியச் செயலாளா் பி.டி. பகு மற்றும் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com