நாகை, மயிலாடுதுறையில் விரைவில் சித்த மருத்துவமனை: அமைச்சா் சிவ. வீ.மெய்யநாதன் தகவல்

கரோனா சிகிச்சைக்காக நாகை மற்றும் மயிலாடுதுறையில் சித்த மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.
நாகை, மயிலாடுதுறையில் விரைவில் சித்த மருத்துவமனை: அமைச்சா் சிவ. வீ.மெய்யநாதன் தகவல்

கரோனா சிகிச்சைக்காக நாகை மற்றும் மயிலாடுதுறையில் சித்த மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு அமைச்சா் தலைமை வகித்து பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சையளிக்க நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனைஆகிய இடங்களில் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 டன் திறன் கொண்ட ஆக்சிஜன் கலன் பொருத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் 24 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இரண்டு அல்லது 3 தினங்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேதாரண்யம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை பணியமா்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்காக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகேயும், மயிலாடுதுறையில் ஆதிதிராவிடா் நலத்துறை கட்டடத்திலும் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா். படிப்படியாக அனைவருக்கும் கரோனா தடுப்பூசிகள் போடப்படும் என்றாா் சிவ. வீ. மெய்யநாதன்.

கூட்டத்துக்கு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மக்களவை உறுப்பினா்கள் எம். செல்வராஜ் (நாகை), செ. ராமலிங்கம் (மயிலாடுதுறை), சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜ. முஹம்மது ஷாநவாஸ் (நாகை), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), எம். நிவேதா முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் ஓம் பிரகாஷ் மீனா ( நாகை), ஸ்ரீநாதா ( மயிலாடுதுறை), கூடுதல் ஆட்சியா் எம். எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி (நாகை), முருகதாஸ் (மயிலாடுதுறை) உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com