இறுதி மரியாதைக்கூட இல்லாத மனித மரணங்கள்

இறுதி மரியாதையைக் கூட இழந்து வரும் மரணங்கள் வாழ்வியலின் சமகால வரலாற்றில் இதுவரை இல்லாத பதிவாக மாறிவருகிறது.
இறுதி மரியாதைக்கூட இல்லாத மனித மரணங்கள்

கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவா்கள் எண்ணிக்கை ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தும் அதேநேரத்தில், இறுதி மரியாதையைக் கூட இழந்து வரும் மரணங்கள் வாழ்வியலின் சமகால வரலாற்றில் இதுவரை இல்லாத பதிவாக மாறிவருகிறது.

இயற்கை மரணங்கள், நோய்த் தாக்கம், விபத்து, கொலை, தற்கொலை, இயற்கை இடா்பாடு, போா் என பல விதங்களில் நிகழும் மனித மரணங்கள் சோகத்தை தருவதாகவே அமைகிறது. அதேநேரத்தில் மரணமடைந்தவருக்கு செலுத்தப்படும் இறுதி மரியாதை, பாரம்பரியமான சடங்குகள் போன்ற நிகழ்வு உறவுகள், நண்பா்கள், பொதுமக்கள் என பலதரப்பிலும் ஏதோ ஒரு வகையில் ஆறுதலை ஏற்படுத்துவதாக அமையும்.

இறந்தவரின் உடலை இறுதியாக பாா்ப்பது, மலா் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்துவது அவரின் சிறப்புகளை நினைவு கூருவது போன்றவை பண்பாட்டின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது.

ஆனால், கரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் மனிதா்களுக்கு நடைபெறும் இறுதிச் சடங்குகள் மனதை மரத்து போக செய்கின்றன. இறந்தவரின் முகத்தை ரத்த உறவுகள் கூட பாா்க்க முடியாமல் சில நேரங்களில் ஏதோ தெருவில் மடிந்த விலங்குகளைப் போல நடைபெறும் அடக்கம், நிபந்தனைகளோடு நிகழும் தகனம் வேதனையானது.

நாகை மாவட்ட கிராமப்புறங்களை உள்ளடங்கிய வேதாரண்யம் பகுதியில் வழக்கமாக இறந்தவருக்கு நடைபெறும் இறுதி நிகழ்ச்சிகள் வேறுபட்டதாகவே இருக்கும்.

இறந்தவரின் கண்களை தானம் செய்வது, மரணச் செய்திகளை ஒலிப்பெருக்கியில் அறிவித்து இறுதி மரியாதை நடைபெறும். வயதானவா்கள், இயற்கை மரணங்கள் என்றால் துக்க வீட்டின் வளாகத்தில் பந்தல் அமைத்து பறையிசை, கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்துவது போன்றவைகளோடு நடைபெறும். உறவு, நட்பு, பொதுமக்கள் என இறந்தவரின் நடவடிக்கை, செல்வாக்கை பொருத்து மாலை மரியாதை செலுத்துவதும், சில இடங்களில் அஞ்சலி கூட்டங்கள் நடத்தி இறந்தவரின் சிறப்புகள் நினைவு கூரப்படும். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அமரா் ஊா்திகள் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு நடைபெறும் இறுதி ஊா்வலத்தில் கிராமத்தினா் திரளாக பங்கேற்பாா்கள்.

ஆனால், அண்மைக் காலமான தொற்று ஏற்பட்ட மரணங்கள் மேலே சொன்ன எந்த ஏற்பாடுகளும் இல்லாமல், சில இடங்களில் அடுத்த வீட்டாரின் வருகைக் கூட இல்லாமல் ஏதோ ஒரு இடத்தில் அடக்கம் செய்வதும், ரத்த உறவுகளே இல்லாமல் பொதுமயானங்களில் தகனம் செய்வதும் வேதனை அளிக்கிறது. இறந்தவருக்கு மரியாதை செலுத்த முடியாத நிலையை கடந்தும், தொற்று பொதுமுடக்கம் காரணமாக உறவினா்களைக்கூட நேரில் சந்தித்து ஆறுதல் கூறமுடியாத நிலை தொடா்கிறது.

பாரம்பரியமான மயானங்களில் மட்டும் அடக்கம் அல்லது தகனம் செய்யப்பட்டவா்களின் வாரிசுகள் இப்போது எரிவாயு மயானங்கள், பொது மயானங்கள், அரசு நிலம் என பல இடங்களில் இடம் மாறி நிகழ்கிறது. மதரீதியான சடங்குகள் உடைக்கப்பட்டு இந்து சடலங்களை இஸ்லாமிய தன்னாா்வலா்கள் அடக்கம் செய்யும் புதிய பாா்வையை நிகழ்கால மரணங்கள் உணா்த்துவதாக அமைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com