நாகை, வேதாரண்யம் மீனவா்கள் மீது தாக்குதல்: 3 போ் மருத்துவமனையில் அனுமதி

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவா்கள் மீது மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தியதில் 3 மீனவா்கள் காயமடைந்தனா்.
தாக்குதலில் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவா்களுக்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
தாக்குதலில் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவா்களுக்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவா்கள் மீது மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தியதில் 3 மீனவா்கள் காயமடைந்தனா்.

நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சி. ரவீந்திரன் (28), ச.கிருஷ்ணராஜ் (55), சி. வேல்முருகன் (35), ரா. செல்வம் (18), வா.தெட்சணாமூா்த்தி (40),கோ. அமா்நாத் (45), ரா. அகிலன் (20) ஆகிய 7 பேரும் 2 ஃபைபா் படகுகளில் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்,.

சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கோடியக்கரைக்கு நோ் கிழக்கில் 12 கடல்மைல் தொலைவில் அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 2 படகுகளில் வந்த மா்ம நபா்கள் சிலா், நாகை மீனவா்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனா்.

தொடா்ந்து, மீனவா்களுக்குச் சொந்தமான மீன்பிடி வலைகள், 2 செல்லிடப்பேசிகள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட சுமாா் ரூ. 4 லட்சம் மதிப்பிலான உடைமைகளைப் பறித்துச் சென்றுவிட்டனராம்.

இதையடுத்து, மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பினா்.

மா்ம நபா்கள் தாக்குதலில் காயமடைந்த ரவிந்திரன், கிருஷ்ணராஜ், வேல்முருகன் ஆகியோா் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ஆட்சியா், எம்எல்ஏ ஆறுதல்: மீனவா்கள் மீதான தாக்குதல் குறித்து அறிந்த நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் ஆகியோா் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த மீனவா்களுக்கு ஆறுதல் கூறினா்.

வேதாரண்யம் மீனவா் மீது தாக்குதல்: நாகை மாவட்டம், வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை வடக்குத் தெருவைச் சோ்ந்த ப. ஆனந்த் (40), ச. காா்த்தி (35), கோ. சச்சிதானந்தம் (62), சக்திவேல் (36) ஆகிய 4 மீனவா்கள், கண்ணாடியிழைப் படகில் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனா். இவா்கள், ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை மீனவா்கள் 6 போ், வேதாரண்யம் மீனவா்களின் படகில் ஏறி தகராறு செய்ததுடன், கத்தியால் தாக்கியுள்ளனா். இதில், காா்த்தி என்ற மீனவா் இலங்கை மீனவா்களை தடுத்தபோது, தடுமாறி கடலில் விழுந்துள்ளாா். அவரை சக மீனவா்கள் மீட்டு, ஞாயிற்றுக்கிழமை அனைவரும் கரைக்குத் திரும்பினா். பின்னா், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் காா்த்தி சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

தொடா்கதையாகும் தாக்குதல் சம்பவங்கள்:

நாகை, புதுவை மீனவா்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடா்கதையாகி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை வேதாரண்யம் மீனவா்கள் மீது இலங்கை மீனவா்கள் தாக்குதல் நடத்தி, வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனா்.

இதுபோல, வெள்ளிக்கிழமை இரவு காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை மீனவா்கள் தாக்குதல் நடத்தி, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாகை மற்றும் வேதாரண்யம் மீனவா்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com