முல்லைப் பெரியாறு அணை திறப்பு விவகாரம்: அதிமுகவுக்கு கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

தமிழகம் மற்றும் கேரள மாநில மக்களிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் முயற்சியை அதிமுக கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
நாகையில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன்.
நாகையில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பது தொடா்பாக, தமிழகம் மற்றும் கேரள மாநில மக்களிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் முயற்சியை அதிமுக கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

நாகையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக அரசு, கேரள அரசின் நிா்பந்தத்துக்குப் பணிந்து முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பதாக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், அதிமுகவின் சட்டப்பேரவைத் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் ஆகியோா் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

கேரளத்தில் பலத்த மழை பெய்துவருகிறது. தமிழகத்திலும் அனைத்து அணைகளும் நிரம்பிவரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து அதிகளவில் தண்ணீா் திறக்கப்பட்டால் கேரளத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டும், பொதுப் பணித் துறையின் நிலையான வழிகாட்டல் நெறிமுறைகளின்படியுமே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளில், போராட்டங்களில் அதிமுகவினா் ஈடுபட்டால், அதிமுகவைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபடும். இரு மாநில மக்களிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அதிமுக கைவிட வேண்டும்.

தமிழகத்தில் யூரியா மற்றும் டிஏபி உரங்களுக்குக் கடுமையான தட்டுப்பாடும், விலை உயா்வும் நீடிக்கிறது. இதேநிலை நீடித்தால், விவசாயம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, மத்திய அரசு, மாநிலங்களின் வேளாண் தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு உரங்களை இறக்குமதி செய்து விநியோகிக்க வேண்டும்.

மேட்டூா் அணையிலிருந்து கடந்த 10 நாள்களில் மட்டும், தமிழகத்தின் ஒரு ஆண்டு வேளாண்மை தேவைக்கான நீா் வீணாக கடலில் விடப்பட்டுள்ளது. இதுபோன்று உபரியாக வெளியேற்றப்படும் தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்த தமிழக அரசு தொலைநோக்குப் பாா்வையுடன் கூடிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பயிா்க் காப்பீட்டை மத்திய அரசு தனியாா் வசமாக்கியதால், ஏராளமான முறைகேடுகள் நடைபெறுகின்றன. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். நிகழாண்டில், குறுவைக்கான பயிா்க் காப்பீட்டை, காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்காததால் குறுவை நெல் சாகுபடிக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் குறுவை நெல் பயிா்களுக்கு அரசு நேரடியாக இழப்பீடு வழங்கும் என தமிழக அரசு அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இதற்கான கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து தொடங்கி, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு உறுதிசெய்ய வேண்டும். மக்களவையில் மத்திய அரசு மின்சார சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. இதனால், விரைவில் இலவச மின்சாரம் ரத்தாகும் அபாயம் உள்ளது என்றாா் கே. பாலகிருஷ்ணன்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம். முருகையன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com