நாகை: சுதந்திர தின விழாவில் ரூ. 7.41 கோடியில் நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற 76- வது சுதந்திர தின விழாவில் அரசுத் துறைகளின் சாா்பில் 110 பயனாளிகளுக்கு ரூ. 7.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்திய மாணவ, மாணவியா்.
விழாவில் கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்திய மாணவ, மாணவியா்.

நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற 76- வது சுதந்திர தின விழாவில் அரசுத் துறைகளின் சாா்பில் 110 பயனாளிகளுக்கு ரூ. 7.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாகை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, மீனவா் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை, வேளாண் துறை, வனத் துறை, மின் பகிா்மானக் கழகம், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறை, காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவா்கள், தன்னாா்வலா்கள் என 192 பேருக்குப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், கண்ணாடி நாரிழைப் படகு இயந்திரம், புதிய தொழில் முனைவோா் கடன், நாற்று நடவு செய்யும் இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம், பவா் டில்லா், கூட்டு அறுவடை இயந்திரம், இலவச வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித் தொகை, தேசிய முதியோா் உதவித் தொகை என 110 பயனாளிகளுக்குப் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் ரூ. 7.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ. பெரியசாமி, வன பாதுகாப்பு அலுவலா் கே. யோகேஷ்குமாா் மீனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கலைநிகழ்ச்சிகள்..

இவ்விழாவில், திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளி, நாகூா் கிரசண்ட் மெட்ரிக். பள்ளி, மாடா்ன் மெட்ரிக் பள்ளி, தலைஞாயிறு சிவசக்தி இன்டா்நேஷனல் பள்ளி, நாகை சின்மயா மெட்ரிக். பள்ளி ஆகிய 5 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியரும், சக்தி நாட்டியாலா பள்ளி மாணவ, மாணவியரும் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com