வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் தொடக்கம்

வேதாரண்யத்தில் மழை பாதிப்புக்கு பின்னா் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கிய நிலையில், உப்பை பாத்திகளில் இருந்து வாரும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் தொடக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மழையால் தடைபட்டிருந்த உப்பு உற்பத்தி பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

வேதாரண்யம் பகுதியில் அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பணிகள் நடைபெறுகிறது.

இப்பகுதியில் இரண்டு பெரிய தனியாா் நிறுவனங்கள் தவிர 670 சிறு, குறு உற்பத்தியாளா்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பணியில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபடுகின்றனா்.

இந்தநிலையில், நிகழாண்டின் தொடக்கம் வரையில் நீடித்த வடகிழக்குப் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உப்பு பாத்திகளில் தேங்கி நின்ால், உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டன.

இதனால், வழக்கமாக ஜனவரியில் பொங்கல் பண்டிகை நாளில் பொன்னுப்பு (முதல் உப்பு அறுவடை) எடுத்து தொடங்கும் உற்பத்திப் பணி தாமதமானது.

இதையடுத்து, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கின. தொடங்கிய இரண்டு வாரத்தில் மீண்டும் மழைப் பொழிவு ஏற்பட்டதால் உப்பு உற்பத்தி தடைபட்டது.

இந்நிலையில், மழைநீா் வற்றிய பாத்திகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கின.

கடந்த சில நாள்களாக இந்த பகுதியில் கடுமையான வெப்பமான வானிலை நிலவுவதால் மீண்டும் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த கடும் வெயில் உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உப்புநீா் வேகமாக ஆவியாகி உப்பு விளையும் இயல்பை பெற்று வருகிறது.

இதையடுத்து, தொழிலாளா்கள் உப்பு வாரும் பணியில் முனைப்புக்காட்டி வருகின்றனா். ஆனாலும், தண்ணீா் சரியாக வற்றாத பல பாத்திகளில் சீரமைப்புப் பணிகளை தொடங்குவதில் தாமதம் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com