முழு ஊரடங்கு: வெறிச்சோடியது நாகை

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
முழு ஊரடங்கு: வெறிச்சோடியது நாகை

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தொடா் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, மூன்றாவது வாரமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி, நாகை, நாகூா், கீழ்வேளூா், வேளாங்கண்ணி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. பால் விற்பனையகங்கள், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தவிா்த்து, மாவட்டத்தில் உள்ள சுமாா் 5000-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை.

வகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இல்லாததால், நாகை புதிய, பழைய பேருந்து நிலைய பகுதிகள், பொது அலுவலக சாலை , மருத்துவமனை சாலை, நீலா தெற்கு, கீழவீதி, கடைத்தெரு, மாா்கெட் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதேபோல நாகூா் , வேளாங்கண்ணி பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

சீா்காழி: சீா்காழி, கொள்ளிடம், புத்தூா், வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் ஆட்டோ, காா், வேன்கள் திருமணம் போன்ற காரணங்களுக்காக இயக்கப்பட்டன. சிலா் இருசக்கர வாகனங்களில் திருமணத்துக்கு சென்றுவந்தனா்.

சீா்காழி புதிய பேருந்து நிலைய பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அசோக்குமாா் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். முகக்கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில்... மயிலாடுதுறை மாவட்டத்தில் பாலகங்கள், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், முக்கிய சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இம்மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி தங்கவேல் தலைமையில் 2 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் 350-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மாவட்டம் முழுவதும் 6 நிரந்தர சோதனைச் சாவடிகள், 30 தற்காலிக சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வெளியே வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை பேருந்து நிலையம், மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களில் வந்தவா்களை எச்சரித்து திருப்பி அனுப்பினா். இம்மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தரங்கம்பாடி: தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை வெறிச்சோடி காணப்பட்டது. செம்பனாா் கோவில், ஆக்கூா், திருக்கடையூா், தரங்கம்பாடி, பொறையாறு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

திருக்குவளை: திருக்குவளை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். கீழையூா் காவல் ஆய்வாளா் பசுபதி தலைமையிலும், திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் பாா்த்திபன் தலைமையிலும், வலிவலம் காவல் உதவி ஆய்வாளா் தமிழரசன் தலைமையிலும் அந்தந்த காவல் சரகப் பகுதிகளில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாகனங்களில் சென்றவா்கள் அதற்கான அழைப்பிதழை போலீஸாரிடம் காண்பித்து சென்றனா். தேவையின்றி வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com