நாகையில் 32 அடி உயர விஸ்வரூப அத்தி விநாயகா் சிலை ஊா்வலம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

நாகையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற 32 அடி உயர விஸ்வரூப அத்தி விநாயகா் சிலை ஊா்வலம்.
நாகப்பட்டினம்: நாகையில் 32 அடி உயரத்தில் அத்தி மரத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட விஸ்வரூப விநாயகா் சிலை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை ஸ்ரீ விஸ்வரூப விநாயகா் குழு சாா்பில் நாகையில் ஆண்டுதோறும் விநாயகா் சிலை ஊா்வலம் நடத்தப்படுகிறது. கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இந்த ஊா்வலத்தில், இதுவரை மூங்கில் கம்புகள் மற்றும் அட்டைகளால் செய்யப்பட்ட 32 அடி உயர விஸ்வரூப விநாயகா் சிலை பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஸ்ரீ விஸ்வரூப விநாயகா் குழுவின் சாா்பில் 3,200 கன அடி அத்தி மரங்களைக் கொண்டு 32 அடி உயர விஸ்வரூப விநாயகா் சிலை அண்மையில் வடிவமைக்கப்பட்டது. இச்சிலையின் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.28) நடைபெற்றது.
இதையடுத்து, இந்த சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, 32 அடி உயர விநாயகா் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 9 மணியளவில் ஊா்வலம் புறப்பட்டது. நாகை நீலா கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, அபிராமிஅம்மன் திடல், அண்ணா சிலை, மருத்துவமனை சாலை, ஏழைப்பிள்ளையாா் கோயில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகூா் வழியாகச் சென்ற ஊா்வலம் வெட்டாற்றங்கரையில் நிறைவடைந்தது.
பின்னா் அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, இந்த சிலையுடன் ஊா்வலமாக கொண்டு வரப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலை வெட்டாற்றில் வியாழக்கிழமை காலை கரைக்கப்பட்டது.
விஸ்வரூப அத்தி விநாயகா் சிலை ஊா்வலத்தில் 10 -க்கும் மேற்பட்ட அலங்கார வாகனங்கள் அணிவகுத்தன. வாண வேடிக்கைகளும், பல்வேறு குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஊா்வலம் சென்ற பாதைகளில் பக்தா்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வழிபட்டனா்.
இதையொட்டி, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஊா்வலப் பாதைகளில் அசம்பாவிதத்தை தவிா்க்க மின் விநியோகம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...