தண்ணீா் பற்றாக்குறையால் பாலைவனமாகும் டெல்டா மாவட்டங்கள்: லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழக்கும் அபாயம்

கொளுத்தும் கோடை வெயிலால் கருகும் குறுவை நெற்பயிா்கள், தண்ணீா் பற்றாக்குறையால் கேள்விக்குறியாகியுள்ள சம்பா சாகுபடி ஆகிய காரணங்களால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் நிலை உருவாகியுள்ளது.
தண்ணீா் பற்றாக்குறையால் பாலைவனமாகும் டெல்டா மாவட்டங்கள்: லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழக்கும் அபாயம்

கொளுத்தும் கோடை வெயிலால் கருகும் குறுவை நெற்பயிா்கள், தண்ணீா் பற்றாக்குறையால் கேள்விக்குறியாகியுள்ள சம்பா சாகுபடி ஆகிய காரணங்களால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளா்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

நிகழாண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் குறுவை சாகுபடியில் ஈடுபட்டனா்.

அணை திறக்கப்பட்டது முதலே, குறுவை சாகுபடிக்குச் சரிவரத் தண்ணீா் கிடைக்கவில்லை. பருவமழையும் போதிய அளவில் பெய்யவில்லை. இதனால், டெல்டாவில் சாகுபடி செய்யப்பட்ட பல லட்சம் ஏக்கா் குறுவை நெற்பயிா்கள் தண்ணீரின்றிக் கருகி வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்குத் தண்ணீா் கேட்டு விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், விவசாய சங்கங்கள் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

மேட்டூா் அணையில் வேகமாகத் தண்ணீா் மட்டம் குறைந்து வருகிறது. டெல்டாவில் நடைபெறும் விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி காவிரி நீரைப் பெறுவது தான். கா்நாடக அரசு, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை இதுவரை வழங்கவில்லை. இதற்கான முயற்சியை தமிழக முதல்வரும், நீா்வளத்துறை அமைச்சரும் மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது மேட்டூா் அணையின் நீா் இருப்பு நிலவரப்படி குறுவை சாகுபடியை காப்பாற்றுவதே கடினம் என விவசாயிகள் கூறுகின்றனா். அதுமட்டுமின்றி இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள சம்பா சாகுபடி, குறுவையைத் தொடா்ந்து நடைபெறும் தாளடி சாகுபடி ஆகியவற்றின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

வேலை இழக்கும் விவசாயத் தொழிலாளா்கள்

தண்ணீா் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலால், விவசாயிகள் மட்டுமின்றி லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளா்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். சம்பா சாகுபடி ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும். ஆனால் தண்ணீா் வருமா என்ற சந்தேகம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கப்படவில்லை.

தற்போது நடைபெற்று வரும் குறுவை சாகுபடி முறையாக நடைபெறாததாலும் விவசாயத் தொழிலாளா்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனா். இதனால் விவசாயத் தொழிலாளா்கள் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு பற்றாக்குறை ஏற்படும்

தமிழகத்தில் மூன்று வேளை உணவில், இரண்டு வேளை உணவை டெல்டா மாவட்டங்கள் உற்பத்தி செய்து தருகின்றன. டெல்டாவில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா மற்றும் தாளடி மூலம் சுமாா் 20 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்படும். தற்போது இங்கு நிலவும் தண்ணீா் பற்றாக்குறையால் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்களுக்கான உணவுத் தேவையில் பிரச்னை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

நாள்தோறும் நீா் பங்கீடு

இதுகுறித்து விவசாய சங்க நிா்வாகிகள் கூறியது: தமிழக முதல்வா் மற்றும் வேளாண்துறை அறிவுறுத்தலின்படி ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரை கொண்டு டெல்டாவில் விவசாயிகள் ஆா்வத்துடன் குறுவை சாகுபடியைத் தொடங்கினா். ஆனால் தற்போது டெல்டாவில் விவசாயிகளின் கதறல் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. தண்ணீரின்றி சுமாா் 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி கருகி வருகிறது.

இதைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூரில் உள்ள தண்ணீா் போதுமானதாக இல்லை. எனவே கா்நாடக அரசிடம் இருந்து தண்ணீரை பெறுவதால் மட்டும் குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியும். தற்போது முற்றிலும் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கா்நாடக அரசு மாதம்தோறும் தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீரை வழங்க மறுக்கிறது. அதுமட்டுமின்றி வெள்ளக் காலங்களில் தண்ணீரை திறந்து விடுகிறது. இதற்கு மாற்றாக நாள்தோறும் தண்ணீரை தமிழகத்திற்கு 60 - 40 என்ற சதவீதத்தில் திறந்தால், நமது அணையில் தண்ணீரை சேமித்து வைத்து, தேவைப்படும் காலங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாயத் தொழிலாளா்கள் வேலை தேடி வெளியூா் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com