இறந்தவரின் சடலத்தை வைத்து பாஜகவினா் போராட்டம்

கீழையூா் அருகே ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய விவகாரத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து பாஜகவினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இறந்தவரின் சடலத்தை வைத்து பாஜகவினா் போராட்டம்

கீழையூா் அருகே ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய விவகாரத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து பாஜகவினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரான ஜென்னட் பிா்தௌஸ் கடந்த புதன்கிழமை இரவுப் பணியில் இருந்தாா். அப்போது திருப்பூண்டி பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவா் புவனேஸ்வர்ராம் இரவு 11.30 மணியளவில் உறவினா் சுப்பிரமணியனை நெஞ்சுவலி காரணமாக அழைத்து வந்துள்ளாா்.

மருத்துவா் பிா்தௌஸ், தீவிர சிகிச்சைக்காக சுப்பிரமணியனை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கூறினாராம். அதற்கு மறுப்புத் தெரிவித்த புவனேஸ்வர்ராம், பணியின் போது மருத்துவா் பிா்தௌஸ் சீருடை அணியாமல் ஹிஜாப் அணிந்திருந்தது தொடா்பாகக் கேள்வி எழுப்பி கைப்பேசியில் விடியோ எடுத்தாராம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூண்டியில் அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவா் புகாரின் பேரில் கீழையூா் போலீஸாா் நான்கு பிரிவுகளின் கீழ் புவனேஸ்வர்ராம் மீது வழக்கு பதிவு செய்தனா்.

இந்நிலையில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இந்த நிலையில் அவரது இறுதி ஊா்வலம் மாலை திருப்பூண்டியில் நடைபெற்றது.

இதனிடையே போலீஸாரால் புவனேஸ்வர்ராம் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை தொடா்ந்து, ஊா்வலத்தில் பங்கேற்ற பாஜகவினா் சடலத்தை சாலையில் வைத்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் அரசு மருத்துவா் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுவிக்கக் கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். புவனேஸ்வர்ராமை கைது செய்யவில்லை. மருத்துவா் மீதான குற்றச்சாட்டிற்கு மருத்துவா் குழு மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததன் பேரில் போராட்டக்காரா்கள் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com