உண்ணாவிரதப் போராட்டத்தில் மயக்கமடைந்த மூதாட்டி.

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

திருமருகல், மே 2: நாகை மாவட்டம், திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தைக் கண்டித்து, விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதில் பங்கேற்ற மூதாட்டி மயக்கமடைந்தாா்.

சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக, நிலம் கையகப்படுத்தப்பட்டதில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், விவசாயத் தொழிலாளா்கள் இழப்பீடு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மத்திய நில எடுப்பு சட்டத்தின்படி, மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு இழப்பீட்டுத் தொகையை கடந்த 4 ஆண்டுகளாக வழங்கவில்லை என குற்றம்சாட்டும் இவா்கள், இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; அதன்பிறகே, நிலங்களை அளவீடு செய்வது உள்ளிட்ட பணிகளை சிபிசிஎல் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த கிராம மக்கள் புதன்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் இப்போராட்டம் தொடா்ந்தது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற கோபுராஜபுரம் ஊராட்சி வெள்ளப்பாக்கத்தைச் சோ்ந்த மூதாட்டி அஞ்சம்மாளுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவசர ஊா்தி மூலம் அவரை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com