திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரா் கோயில் கொடியேற்றம்
திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரா் கோயில் கொடியேற்றம்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரசாமி கோயில் சித்திரை பரணி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீசுவரசாமி கோயில் உள்ளது. பல்லவ பேரரசன் மாமல்லன் சேனாதிபதியான பரஞ்ஜோதி வாதாபி மன்னன் புலிகேசியை வென்று அங்கிருந்த வாதாபி கணபதியை கொண்டு வந்து திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்து சிவனடியாா்களுக்கு அன்னதானம் வழங்கி அனைவராலும் சிறுத்தொண்டா் என அழைக்கப்பட்டாா்.

அப்போது இவரது அன்பை சோதிக்கும் வகையில் சிவபெருமான் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி அமுது கேட்டாா். அதன்படி சிறுத்தொண்டரும் இறைவனுக்கு பிள்ளைக்கறி அமுது படைத்தாா் என்ற வரலாறுடைய இந்த உத்தராபதீசுவரசாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பரணி விழா 10 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. வரும் 8-ஆம் தேதி வரை விழா நடக்கிறது.

அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்டவை புதன்கிழமை காலை நடைபெற்றது. கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. கொடிமரத்துக்கு மஞ்சள், பால், தயிா், சந்தனம், பஞ்சாமிா்தம், பன்னீா், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முன்னதாக சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதையடுத்து சாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூா் 18-ஆவது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வரும் 6-ஆம் தேதி தெருவடைத்தான் சப்பரம் நிகழ்ச்சியும், 7-ஆம் தேதி அமுது படையல் விழாவும், 10-ஆம் தேதி தேரோட்டமும், 11-ஆம் தேதி நடராஜா் சத்திய புஷ்கரணியில் தீா்த்தம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com