பட்டம் பெறும் மாணவர்கள் முற்போக்குச் சிந்தனையுடன் செயல்பட்டால் உயர்ந்த நிலையை அடையலாம் என்றார் சென்னை டி.வி.எஸ். குழும செயல் இயக்குநர் என். ரவிச்சந்திரன்.
திருவாரூர் அருகே மஞ்சக்குடியிலுள்ள சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 11-வது பட்டமளிப்பு விழாவில் அவர் ஆற்றிய உரை:
கல்வி என்பது காசுக்காக, வேலைக்காக பெறுவது அல்ல. உண்மையான மனிதவள மேம்பாட்டை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டதே கல்வி. பட்டங்களை பெறும் மாணவர்கள் உயர்ந்த குறிக்கோள்கள் உடையவர்களாக விளங்க வேண்டும். சிறந்த தொழில் முனைவோராக வர தங்களின் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய பழக வேண்டும். இளைஞர்களின் சக்தி அளவிட முடியாதது. அதை தீய வழியில் செலவிடாமல் நல்வழிக்கு பயன்படுத்த வேண்டும். வாழ்வில் ஒவ்வொருவரும் தன்னை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். முற்போக்கு சிந்தனை, உண்மையான உழைப்பு, கடமையை சரிவர செய்தல், மற்றவரை பழி கூறாமல் இருத்தல், உறுதியுடன் இருத்தல் ஆகியவை ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
நமது நாட்டு மக்களிடம் ஏராளமான ஆற்றல் புதைந்து கிடக்கிறது.
அதை ஒவ்வொருவரும் சரியாக வெளிப்படுத்தும் போது இந்தியா வல்லரசாக விரைவில் மாறுவது உறுதி என்றார் ரவிச்சந்திரன்.
விழாவில், இளங்கலையில் 397, முதுகலையில் 97, யோகாவில் 57 மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக அளவில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி பட்டம் வழங்கினார்.
கல்லூரித் தாளாளர் க. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் முனைவர் சேகர், கல்லூரிச் செயலர் ஷீலா பாலாஜி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணவேனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.