தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் நூலகங்களில் நாளிதழ்கள், வார, மாத இதழ்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் குறைக்கப்பட்டு வருவது நூலக செயல்பாட்டை மெல்ல மெல்ல தேய்ந்து போகச் செய்வதாக உள்ளது என்கின்றனர் நூலகப் பயன்பாட்டாளர்கள்.
மாவட்ட மைய நூலகங்களுக்கு, கடந்த 2013-14-ஆம் ஆண்டில் சராசரியாக உள்ளூர் முகவர் மூலம் 2 ஆங்கில நாளிதழ்களும், 6 தமிழ் நாளிதழ்களும், அஞ்சல் மூலம் 10 நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என சுமார் 90 பிரதிகளில் இதழ்கள் வாங்கப்பட்டன. 2014-2015 ஆம் ஆண்டில் அஞ்சல் மூலம் வாங்கப்படும் நாளிதழ், வார இதழ், மாத இதழ்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்த்தப்பட்டன.
2015-2016- ஆம் ஆண்டில், மாவட்ட மைய நூலகங்களில் வாங்கப்பட்ட நாளிதழ், வார இதழ், மாத இதழ்களின் எண்ணிக்கை 30-ஆக குறைக்கப்பட்டது. இதே போல, நகராட்சி நூலகங்களின் இதழ்கள் எண்ணிக்கை 17-ஆகவும், ஊராட்சி நூலகங்களின் இதழ்கள் எண்ணிக்கை 11-ஆகவும் குறைக்கப்பட்டன.
2017-2018-ஆம் ஆண்டில் மாவட்ட மைய நூலகங்களில் வாங்கப்பட்ட இதழ்களின் எண்ணிக்கை 30-லிருந்து 25-ஆகவும், நகராட்சி நூலகங்களில் 17-லிருந்து 12-ஆகவும், ஊராட்சி நூலகங்களில் 11-லிருந்து 9-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கைக் குறைப்பு நடவடிக்கைகள் முழுமையும் உள்ளூர் முகவர் மூலமான கொள்முதலில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளனவே தவிர, அஞ்சல் வழியே வாங்கப்படும் இதழ்களின் எண்ணிக்கையில் எவ்வித குறைவும் மேற்கொள்ளப்படவில்லை.
இதுதொடர்பாக, தன்னார்வ அமைப்பின் நிர்வாகி எஸ். ராஜகோபாலன் கூறியது: பத்திரிகைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு வருவதற்கு நிதி பற்றாக்குறை ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அது ஏற்புடையதல்ல. உள்ளாட்சி நிர்வாகத்துக்கு வீட்டுவரி செலுத்தும் ஒவ்வொருவரும், 10 சதவீதத் தொகை நூலகக் கட்டணமாக செலுத்துகின்றனர். இந்தத் தொகை, உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் உடனுக்குடன் காசோலையாக வழங்கப்படுகிறது. எனவே,நூலகங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார்.
மன்னார்குடியைச் சேர்ந்த ஆய்வு நிறைஞர் மாணவர் எஸ். ராஜகோபாலன் கூறியது : ஆய்வு படிப்பு,போட்டி தேர்வு ஆகியவற்றுக்குத் தேவையான நூல் குறிப்புகளை சேகரிக்க நூலகம் தான் மிக வசதியாக இருந்து வருகிறது. வேலை இல்லாத பட்டதாரிகளின் அறிவார்ந்த தேடல்களுக்கு நூலகங்கள் தான் உதவியாக உள்ளன.
நிகழ்கால செய்திகளுக்கு முழுமையாக தெரிந்து வைத்திருந்தால் போட்டி தேர்வில் 20 மதிப்பெண்கள் பெறலாம். புத்தகங்கள், நாளிதழ்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவதால் போட்டித் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பு
என்றார்.
பொறியியல் பட்டதாரி மாணவர்கள் ஏ.அருண்,கே.சித்தார்த் கூறியது: வாசிப்பின் அவசியத்தை விளக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், நூலகங்களில் பத்திரிகைகளின் எண்ணிக்கையை குறைப்பது வேதனையாக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறைக்கு நூலகம் குறித்த சிந்தனை இல்லாமல் போய்விடும் என்றார்.
நூலக வாசகர் வட்ட நிர்வாகி ஓய்வு பெற்ற வங்கி அலுவலர் ஜி.மோகன்தாஸ் கூறியது: அனைத்து பத்திரிகைகளையும் ஒருவர் வாங்க முடியாது. சில பத்திரிகைகள் நூலகத்தில்தான் இருக்கும் என நம்பி வருபவர்கள் ஏமாற்றம் அடைய வேண்டியுள்ளது. பணம் இருப்பவர்களிடம் கொடை உள்ளம் இருந்தால், நன்கொடை நிதியின் மூலம் அரசு நூலகங்களில் பத்திரிகைகளின் எண்ணிக்கை குறைப்புப் பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு காணலாம் என்றார்.
நூலகங்களில் இதழ்களின் எண்ணிக்கை குறைப்பு நடவடிக்கைகள், வாசகர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பது ஒருபுறம் என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் நூலக ஊழியர்களையும் மனதளவில் பாதித்து வருகிறது. நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட இதழை வாசித்துப் பழக்கப்பட்ட வாசகர் நூலகத்துக்கு வரும் போது, அந்த இதழ் நிறுத்தப்பட்டு விட்டது என்ற தகவலை தெரிவிக்கும் நூலக ஊழியர்கள், வாசகர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இது பெரும் மன உளைச்சலை அளித்து வருகிறது என்கின்றனர் நூலக ஊழியர்கள்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நூலக அலுவலர் சு. யசோதா கூறியது: அரசு எடுத்துள்ள முடிவு நிரந்தரமானது அல்ல. பத்திரிகைகள் குறைப்பு என்பது, தற்போது ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையால் எடுக்கப்பட்ட முடிவாகும். அதிக அளவில் வாசகர் விரும்பும் பத்திரிகைகளை வாங்குமாறு அனைத்து நூலகர்களுக்கும் துறைவாரியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
நூலகங்களில் வாங்கப்படும் இதழ்களின் எண்ணிக்கை குறைப்பு தொடர்ந்து அதிகரித்து வருமானால், நூலகப் பயன்பாடும், நூலக செயல்பாடும் மெல்ல, மெல்ல தேய்ந்து அழியும். இது, நாளைய சாதனையாளர்களாக உயர இருப்பவர்களின் கனவுகளை கானல் நீராக்கி விடும் என்பதைக் கருத்தில் கொண்டு, நூலக வளர்ச்சிக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
சித்திரை மாதப் பலன்கள் - ரிஷபம்
சித்திரை மாதப் பலன்கள் - மேஷம்

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

