தண்ணீர் தேவையை நோக்கி சம்பா பயிர்கள் விவசாயிகள் கவலை

திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்குத் தண்ணீர் தேவைப்படும் நிலையில் ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில்
Updated on
2 min read

திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்குத் தண்ணீர் தேவைப்படும் நிலையில் ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து குறைந்திருப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 26 பெரிய ஆறுகளும், 700-க்கும்  மேற்பட்ட சிறிய வாய்க்கால்களும் ஓடுகின்றன. இவற்றின் வழியே செல்லும் நீர், விளை நிலங்களுக்கும், மக்களின் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கும் பயன்படுகிறது. ஆனால், தற்போது பெரும்பாலான வாய்க்கால்கள் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கின்றன. ஆறுகளில் சில இடங்களில் காய்ந்தும், சில இடங்களில் மிகக் குறைந்த அளவு நீரும் உள்ளன. 
திருவாரூர்  மாவட்டத்தில் 1,47,800 ஹெக்டேர் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஏஎஸ் 16, ஏடிடி 45,  ஏடிடி 39, கோ 51, சிஆர் 1009, ஆடுதுறை 38, ஆடுதுறை 39 உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவைகள், 135 நாள்களிலிருந்து 150 நாள்கள் உடையவை. தற்போது, இந்த ரகங்கள் அனைத்தும் 60 நாள்களை கடந்து விட்டன. 
 எனினும், இந்தப் பயிர்களுக்கு  இன்னமும் சுமார் 5 முறை தண்ணீர் விட வேண்டியது அவசியமாகிறது. ஆறு, வாய்க்கால்களிலும் நீர்வரத்து இல்லாததால் இந்த பயிர்களுக்குத் தண்ணீர் விட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். சில இடங்களில் கதிர் வரும் பருவத்தை பயிர்கள் எட்டியிருக்கும் நிலையில், பயிர்களுக்குத் தண்ணீர் அவசியமாகிறது. ஏற்கெனவே, மழையால் பயிர்கள் சேதமடைந்ததால், விளைச்சல் குறைய வாய்ப்புள்ளது என்று கவலைப்படும் விவசாயிகளுக்கு, தற்போது தண்ணீர் பிரச்னை கவலையை அதிகரித்துள்ளது. 
 தற்போது ஆறுகளில் செல்லும் நீரும்  வயல்களின் நீர்மட்டத்தைவிட குறைவாக இருப்பதால், அந்த தண்ணீரை வயல்களுக்குப் பாய்ச்சுவதில் சிரமம்  ஏற்படுகிறது. இதனால், மோட்டார் மூலமாக சிலர் வயல்களுக்கு நீரை பாய்ச்சுகின்றனர். சொந்தமாக மோட்டார் இல்லாதவர்கள் 1 மணி நேரத்துக்கு ரூ. 200 என பணம் கொடுத்து நீர் பாய்ச்சுகின்றனர்.  1 ஏக்கருக்கு குறைந்தது 7 மணி நேரமாவது நீர்  பாய்ச்சவேண்டும்  என்கின்றனர் விவசாயிகள்.
 இதுகுறித்து காவிரி ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சா.வி. ராமகிருஷ்ணன் கூறியது: 
மேட்டூர் அணையிலிருந்து சுமார் 20 ஆயிரம் கன அடி நீர் திறந்தால்தான் கடைமடை வரை தொய்வின்றி தண்ணீர் பாயும். இந்நிலையில், உடனடியாக முறைப் பாசனத்தை அமல்படுத்தியதால் கடைமடை வரை தண்ணீர் வரவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் களிமண் உள்ள பகுதி. இதனால், ஆழ்துளைக் கிணறு வசதியும் அதிகம் கிடையாது. தற்போது, பயிர்கள் வளர்ந்த நிலையில் உள்ளன. எனவே, கூடுதலாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.   
இதுகுறித்து, திருவாரூர் அருகே புலிவலத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணையன் கூறியது:  வயலுக்குத் தேவையான தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அருகிலே உள்ள வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால், நீண்ட தூரத்துக்கு குழாய் மூலமாக நீர் எடுக்க வேண்டியுள்ளது. 
தற்போது, வயலுக்கு விடப்படும் நீர், குறைந்தது 5 நாள்கள் வரை மட்டுமே தாக்குப்பிடிக்கிறது. இன்னமும் 60 நாள்களுக்கு மேல் பயிர்களைக் காப்பாற்ற வேண்டியிருப்பதால் மீதமுள்ள நாள்களுக்கு தண்ணீருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை என்றார்.
தற்போது, பயிர்களுக்குத் தண்ணீர் தேவை என்ற நிலையில் வடகிழக்குப் பருவமழை காலம் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருப்பது விவசாயிகளை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கிறது. 
எனவே, கடந்த சில நாள்களுக்கு முன்பு வயலிலிருந்து தண்ணீரை வடியச் செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தற்போது தண்ணீருக்காகப் போராட வேண்டிய நிலையுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com