இன்று வெப்பம் அதிகரிக்கும்: நண்பகலில் வெளியே செல்லவேண்டாம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.18) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பகல் நேரங்களில்

திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.18) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பகல் நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.  
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் மதியம் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம். வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட மக்கள் அனைவரும் தண்ணீர், இளநீர் மற்றும் இயற்கை பானங்களை பருகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும்கூட போதுமான அளவு தண்ணீரை முடிந்தவரை அடிக்கடி எடுத்துக் கொள்ளவும். தளர்வான மற்றும் நுண்ணிய பருத்தி ஆடைகள், பாதுகாப்பு கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகள் போன்றவற்றை சூரிய வெப்பத்தில் வெளியே செல்லும் போது பயன்படுத்தவும்.
பயணம் செய்யும்போது தண்ணீர் எடுத்துச் செல்லவும். மேலும் தலை, கழுத்து, முகம் மற்றும் உடல் உறுப்புகளை ஈர துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர் முற்பகல் 11.30 முதல் 3 மணி வரை திறந்த வெளியில் கல்வி கற்கக் கூடாது. சமையல் பணிகளை பெரும்பாலும் நண்பகலில் செய்வதை தவிர்க்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோர் மதியம் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதைத் தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com