நாட்டின் 72 -ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நகர மக்கள் நலச் சங்க அமைப்பின் சார்பில், மன்னார்குடியில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டன.
சங்கத்தின் செயலர் எம். அய்யப்பன் தலைமையில், கீழராஜவீதியில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகியும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான எம். கோபால்சாமி தென்கொண்டார் வீடு, மேலபத்மசாலவர் தெருவில் உள்ள தியாகி ஜெகநாதன் பிள்ளை வீடு, ஹரித்ராநதி தெப்பக்குளம் வடகரையில் உள்ள நகர்மன்ற முன்ளாள் உறுப்பினர் தியாகி காகாஜி ராமசாமி வீடு ஆகியவற்றுக்குச் சென்று, மறைந்த தியாகிகளின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டன.
இதில், சங்கத் தலைவர் பி. அருள்பிரகாஷ், பொருளாளர் ஆர். ராஜகோபால், துணைச் செயலர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தென்பரை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ரோட்டரி சமுதாயக் குழுமம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, ஊராட்சி முன்னாள் தலைவர் ஆவணி தலைமை வகித்தார்.
ரோட்டரி சமுதாயக் குழுமத் தலைவர் நா. சுப்ரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி தொடக்கப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணதாசன், ரோட்டரி செயலர் ராக. பாஸ்கர், தலைமை ஆசிரியர்கள் ரா. ஜெய்சங்கர், அ. ரோஸ்லின் ஜெயராணி, கிராம கமிட்டி தலைவர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம், ஜேசிஐ மன்னார்குடி பவர் அமைப்பு சார்பில், சுதந்திர தின விழா சுந்தரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. ஜேசிஐ பவர் தலைவர் கா. கண்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். இதில், பள்ளி மாணவர்களுடன், கல்லூரி மாணவியர் இணைந்து, தாய்த் திருநாட்டைத் தூய்மையாக்குவோம், வேற்றுமையில் ஒற்றுமை காண்போம், உழைப்பால் உயர்வு பெறுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் தேசிய பயிற்சியாளர் சா. சம்பத், பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலமரவாக்காடு தேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் எஸ். கௌரி தலைமை வகித்தார். தாளாளர் எஸ். மதிகுணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி முதல்வர் வி. ராதா பரிசு வழங்கினார்.
மன்னார்குடி அசோகா சிசு விஹார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் கற்பகம் பொன்முகில் தலைமை வகித்தார். தாளாளர் எம்.ஜி. வெங்கட்ராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
எடமேலையூர் லிட்டில் ப்ளவர் விஸ்வநாத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் பி.வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மூத்த அலுவலர் எஸ். செல்வராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் தேசியக் கொடியை அரிமா சங்கத் தலைவர் ராஜேந்திரன் ஏற்றிவைத்தார்.
இதில், லயன்ஸ் சங்க மாவட்ட நிர்வாகிகள் மருத்துவர் சி. அசோக்குமார், மருத்துவர் எஸ். தர்மராஜன், தலைமை ஆசிரியர் மா. தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.