தெருமுனைகளில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க புது முயற்சி

திருவாரூர் நகரப் பகுதியில் தெருமுனைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தவிர்க்க, அந்த இடங்களில் கோலங்கள் போடும் முறையை நகராட்சி தொடங்கியுள்ளது.
Updated on
2 min read

திருவாரூர் நகரப் பகுதியில் தெருமுனைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தவிர்க்க, அந்த இடங்களில் கோலங்கள் போடும் முறையை நகராட்சி தொடங்கியுள்ளது.
திருவாரூர் நகரத்தில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் சுமார் 58 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இதுதவிர, பணி தொடர்பாக நகரப் பகுதிக்கு வந்து, அங்கு வாடகை வீடு மற்றும் அறை எடுத்து 100 -க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இவ்வளவு மக்களும் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தில் சேகரமாகும் குப்பைகளைக் கொட்டுவதற்காக, திருவாரூர் நகரம் முழுவதும் 40 இடங்களில் நகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, தினசரி வீடுகளுக்கே சென்று குப்பைகளை வாங்கும் பணியையும் நகராட்சி பணியாளர்கள் செய்கின்றனர்.
எனினும், குப்பைகள் அள்ளும் பணி மற்றும் குப்பைகள் வாங்கும் பணிகள் காலை நேரங்களில் மட்டுமே செய்யப்படுகின்றன. இதனால் பகல் நேரங்களில் சேரும் குப்பைகளை, தங்களது தெருமுனைகளிலோ அல்லது வீட்டு முனைகளிலோ பொதுமக்கள் கொட்டிச் செல்கின்றனர். அந்த குப்பைகளை மறுநாள் பணியாளர்கள் அள்ளிச் செல்லும் வரை அங்கேயே கிடக்கிறது. இரவு நேரங்களில் அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகள், அந்த குப்பைகளை உணவுப் பொருளுக்காக கிளறி, சாலையெங்கும் பரப்பி விடுகின்றன.
இதனால் அப்பகுதி முழுவதும் குப்பைக் கூளங்களாக மாறுவதுடன், துர்நாற்றம் உருவாகி, சில நேரங்களில் நோய்த் தொற்றுகள் உருவாகவும் வழிவகை செய்கிறது. எனவே, தெரு முனைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனினும், தெருமுனைகளில் குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்படவில்லை.
இதையடுத்து எந்தெந்த தெருமுனைகளில் குப்பைகள் கொட்டப்படுகிறதோ, அந்த இடங்களில் கோலம் போடும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
அதிகாலையில் நகராட்சி பணியாளர்கள், தண்ணீர் தெளித்து கோலங்களைப் போட்டு விட்டுச் சல்கின்றனர். மேலும், மாலையில் அதே இடத்துக்கு வந்து, குப்பைகள் ஏதும் கொட்டப்பட்டுள்ளதா என கண்காணித்துவிட்டுச் செல்கின்றனர்.
இதேபோல், எடத்தெருவில் நேதாஜி சாலையுடன் இணையும் பகுதியில், அங்கு வசிக்கும் மக்களால் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. அங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவுறுத்தியும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.
இந்நிலையில், அந்த இடத்தில் வெள்ளிக்கிழமை முதல் நகராட்சி நிர்வாகம் சார்பில் கோலங்கள் போடப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அப்பகுதியில் கடை வைத்திருக்கும் தினேஷ் கூறியது :
இந்த இடத்தில்தான் இப்பகுதியில் குடியிருக்கும் 100 -க்கும் மேற்பட்ட மக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். மேலும், ஓரமாக சாக்கடை செல்வதால், சாலையில் செல்லும் மக்களை கவனத்தில் கொள்ளாமல் சிலர் இங்கேயே சிறுநீர் கழித்து வந்தனர். கோலங்கள் போடப்பட்டுள்ளதால், கடந்த இரண்டு நாள்களாக இந்த இடம் மிகவும் சுத்தமாக உள்ளது. மேலும் மாலையில் ஊழியர் வந்து குப்பைகள் கொட்டக்கூடாது எனவும், கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்திச் சென்றனர். இதே நிலை தொடர்ந்தால், இப்பகுதி மக்கள் மட்டுமன்றி இவ்வழியே செல்வோரின் சுகாதாரமும் காக்கப்படும் என்றார்.
இதுகுறித்து திருவாரூர் நகராட்சி ஆணையர் காந்திராஜன் கூறியது :
திருவாரூரில் இதுவரையிலும் எடத்தெரு, தென்றல் நகர், நேதாஜி சாலை உள்ளிட்ட 15 இடங்களில் கோலங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதுதவிர வீடுகளுக்குச் சென்று குப்பைகள் வாங்கும் பணியும் தொடர்ந்து செய்யப்படுகிறது. தெருமுனைகளில் கோலங்கள் போடும் பணி அதிகரிக்கப்படும். மக்கும் குப்பைகள் உடனடியாக எருவாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்கே விநியோகிக்கப்படுகிறது. எனவே, குப்பைகளை அப்புறப்படுத்த குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பணியும் தொடர்ந்து, செய்யப்பட்டு வருகிறது. திருவாரூர் நகரம் மாசில்லாத, சுத்தமான நகரமாக மாறும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றார்.
தெருமுனைகளில் வீசப்படும் குப்பைகளால் அலங்கோலமாகும் சாலைகள், இந்த கோலங்களால் அழகாக மாறும் வகையில் நகராட்சியின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com