தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பாடம் நடத்தும் போலீஸார்

திருவாரூரில் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காவல்துறையினர் பாடம் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Updated on
2 min read

திருவாரூரில் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காவல்துறையினர் பாடம் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மாணவர்கள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திருவாரூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 18) முதல் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பாடம் நடத்தியும், குறும்படம் திரையிட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
திருவாரூரில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவதை விட, சாலைப் பள்ளங்களில் தவறி விழுந்து ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. அண்மையில் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், எதிரில் வந்த பேருந்து மோதி உயிரிழந்தனர்.
இதேபோல், திருவாரூர் அருகே சாலையில் உள்ள பள்ளம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். சாலையில் ஏற்பட்ட பள்ளங்களால் இந்த விபத்து ஏற்பட்டது என்ற போதிலும், தலைக்கவசம் அணிந்திருந்தால் உயிர்ச் சேதம் ஒருவேளை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தலைக்கவசம் இல்லாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பாடம் எடுக்கும் நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை முதல் போலீஸார் தொடங்கியுள்ளனர்.
இதற்காக கடந்த இரண்டு நாள்களாக இருசக்கர வாகன ஓட்டிகள் மீது எவ்வித வழக்கும் பதியாமல், அவர்களை சாலை ஓரங்களில் நிறுத்தி, சாலை விதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி படிக்கச் செய்கின்றனர். அத்துடன் சாலை விதிகள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் அங்கு வகுப்பு எடுக்கப்படுகிறது. இதையடுத்தே செல்வதற்கு வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படுகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் ஊராட்சியின் தலைமை கிராமத்துக்குச் சென்று சாலை விதிகள் குறித்து குறும்படத்தை திரையிட்டு, அதன்மூலம் விளக்கமளித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. மேலும், கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பேருந்து நிலையம், கடைத்தெரு உள்ளிட்ட இடங்களுக்கு கலைக்குழு சகிதமாகச் செல்லும் போலீஸார், அங்கு கலைநிகழ்ச்சிகள் மூலமாக சாலை விதிகள், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவப் பிரதிநிதியான நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த கலையரசன் கூறியது:
திருவாரூரில் பெரிய அளவிலான சாலை விபத்துகள் ஏற்படுவது மிகவும் குறைவு. சிறிய விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சாலை விதிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது செல்லிடப்பேசியில் பேசுவது, வேகமாகச் செல்வது, தலைக்கவசம் இல்லாமல் செல்வது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து செல்வது இவற்றை குறைத்தாலே விபத்துகள் குறையும். இவைகளுக்கு தண்டனை தரும் நடவடிக்கைகளை விட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளே சிறந்தவை என்றார்.
இதுகுறித்து தனிப்பிரிவு போலீஸார் கூறியது: சாலை விதிகள் குறித்து திருவாரூர் மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடம் எடுத்தல், குறும்படம் திரையிடல், கலைக்குழு ஆகியவை மூலமாக இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலமாக நமது உயிரை காத்துக் கொள்ள முடியும் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனர்.
தலைக்கவசம் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் அவசியம் என்பதை வாகன ஓட்டிகளாகவே உணரும்போதுதான், பாதுகாப்பான பயணமும், நிம்மதியான பயணமும் ஏற்படும். எனவே, சாலை விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வாகன ஓட்டிகளிடையே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்  என்பது போலீஸாரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, பொதுமக்களின் எதிர்பார்ப்பும்கூட.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com