திருவாரூரில் பாலாலயம் செய்யப்பட்டு, 4 ஆண்டுகளைக் கடந்தும் எவ்விதப் பணிகளும் தொடங்கப்படாமல் உள்ள நொடி நைனார் கோயிலில், திருப்பணிகளை உடனடியாக தொடங்கி குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூரில் தெற்கு வீதி மற்றும் கீழ வீதி சந்திப்பில் உள்ளது ஸ்ரீ நொடி நைனார் கோயில். தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான கோயில் இது. திருவாரூர் ஆழித் தேரோட்டத்தின்போது, தேரடி விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டு, தேர் கிளம்பி இந்த சந்திப்பில் வரும்போது, நொடி நைனார் கோயிலில் பூஜை செய்யப்பட்டு, தேரில் இருக்கும் சுவாமிக்கு பட்டு சாற்றப்படுவது வழக்கமாக இருந்துள்ளது.
பின்னாளில் தேரோட்டம் நடைபெறுவது தடைபட்டதையடுத்து, இந்த கோயில் கவனிப்பாரில்லாமல் போனது. இதனால் ஆக்கிரமிப்புகளில் சிக்கி கோயில் இருந்த இடம் தெரியாமல்போனது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கோயிலுக்கான பாதை சீரமைக்கப்பட்டு, மீண்டும் கோயில் வழிபாட்டுக்கு வந்தது. எனினும் பாழடைந்த நிலையில் காணப்பட்டதால், இந்தக் கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துர்வாசல் கோயில் மற்றும் நொடி நைனார் கோயில்களுக்கு கும்பாபிஷேகத்துக்காக, அந்தந்த கோயில்களில் பாலாலயம் செய்யப்பட்டன. இதில் துர்வாசர் கோயிலில் பணிகள் தொடங்கி இன்னமும் நடைபெற்று வருகின்றன. ஆனால், நொடி நைனார் கோயிலில் எவ்விதப் பணிகளும் தொடங்காமல், அதே பாழடைந்த நிலையில் உள்ளது.
பாழடைந்த நிலையில்...
கோயில் கோபுரம் இருந்த சுவடு தெரியாமல் பட்டை செங்கல்கள் மட்டுமே தெரிகின்றன. அத்துடன் கோயிலின் 4 புறங்களிலும் மேல்புற பூச்சுகள் பெயர்ந்து, பட்டை செங்கல்கள் மட்டுமே நீட்டிக் கொண்டுள்ளன. முன்புறம் உள்ள சிறிய மண்டபத்தில் மேல்புறம் 5 கருங்கற்கள் உள்ளன. இவைகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. அதேபோல், உள்புறம் உள்ள மேல்புற மண்டபம் இடிந்து விழுந்து, பிளக்ஸ் போர்டால் தடுக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் காரணமாக தினசரி சிறிய அளவிலான கற்கள் பெயர்ந்து விழுந்து வருவதாக அங்கு வரும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து மிகுந்த நகரப் பகுதியில் இருந்தாலும், கோயிலுக்கு உள்ளே சென்ற பிறகு, வனாந்தரத்திலே காணப்படும் பாழடைந்த கட்டடம் போன்ற எண்ணம் உண்டாவதைத் தவிர்க்க இயலவில்லை என பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக அங்கு பூஜை செய்து வரும் கார்த்திகேயன் இதுகுறித்து கூறியது:
மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான இது, தற்போது பாழடைந்து காணப்படுகிறது. ஆனாலும் நித்யகால பூஜை, மாதந்தோறும் வரும் 2 பிரதோஷ வழிபாடு, அமாவாசை மற்றும் பெளர்ணமி பூஜை, அன்னாபிஷேகம், சிவராத்திரி பூஜைகள் உள்ளிட்டவை அந்தந்த விசேஷ காலங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் ஆடிப்பூரத்தில் சந்திரசேகரர் வீதியுலாவின்போது பட்டு சாற்றப்படுகிறது. விசேஷ காலங்களின்போது பக்தர்கள் வந்தபடி உள்ளனர். கோயிலின் நிலை கருதி உள்ளே வருவதற்கு சிலர் அச்சப்படுகின்றனர். இந்தக் கோயிலுக்கு பாலாலயம் செய்யப்பட்டு 4 மார்கழிகள் சென்று விட்டன. ஆனால், இதுவரை எவ்விதப் பணியும் தொடங்கவில்லை என்றார்.
கோயிலுக்கு தினசரி வழிபட்டுக்குச் செல்லும் மாறன் கூறியது: இந்தக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிலர் பூஜை பொருள்களையும், கோயிலுக்குத் தேவையான பொருள்களையும் அன்பளிப்பாக வழங்குகின்றனர். ஆனால், கோயில் பாதுகாப்பாக இல்லாததால், அந்த பொருள்கள் திருட்டுபோய் விடுகின்றன. எனவே, கோயிலுக்கு குடமுழுக்கு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். திருப்பணி வேலைகளை தொடங்கினால் உதவி செய்ய பலர் தயாராக உள்ளனர் என்றார்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் கூறியது: சாலையில் செல்லும் வாகனங்களால் இந்தக் கோயில் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. எனவே கோயிலை விரைவில் சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கோயில் முழுவதும் இடிந்து விழும் நிலை ஏற்படும் என்றார்.
பாலாலயம் செய்து 4 ஆண்டுகளாகியும் இன்னமும் எவ்வித பூர்வாங்கப் பணிகளும் தொடங்கப்படாதது, கோயிலுக்கு வரும் பக்தர்களை வருத்தமடையச் செய்துள்ளது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் திருப்பணிகளைத் தொடங்கி, நொடி நைனார் கோயில் கோயில் குடமுழக்கு விழாவை விரைந்து நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.