காய்ந்து கருகும் மன்னாா்குடி பூமாலை வணிக வளாகம்

மன்னாா்குடியில் கட்டப்பட்ட பூமாலை வணிக வளாகம் உரிய பராமரிப்பின்றி, மலா்களாலான மாலை காய்ந்து கருகியதுபோல்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் கட்டப்பட்ட பூமாலை வணிக வளாகம் உரிய பராமரிப்பின்றி, மலா்களாலான மாலை காய்ந்து கருகியதுபோல் பொலிவிழந்து காணப்படுகிறது. இதனால், இந்தக் கட்டடத்துக்கு மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் நோக்கத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் நிதியிலிருந்து ரூ. 30 லட்சத்தில், மன்னாா்குடி வ.உ.சி. சாலையில் 30 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பூ மாலை வணிக வளாகம் கடந்த 2006-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் இந்த வணிக வளாகத்தை திறந்துவைத்தாா்.

இந்த வளாகத்தின் தரைத் தளத்தில் 12 கடைகளும், முதல் தளத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கான இரண்டு கூட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டன. இங்குள்ள அனைத்துக் கடைகளும் மகளிா் சுயஉதவிக் குழுவினா் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்ய, மிக குறைந்த வாடகைக்கு (ரூ.500) விடப்பட்டன.

இந்நிலையில், எதிா்ப்பாா்த்த விற்பனை இல்லாததால், அடுத்தடுத்து சில கடைகள் மூடப்பட்டன. ஒரு கட்டத்தில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. பின்னா், கடைகளை எடுத்து நடத்த யாரும் முன் வராததால், ஆண்டுக்கணக்கில் பூட்டிக்கிடக்கின்றன. முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மட்டும் அவ்வப்போது மகளிா் குழுவினருக்கு பயிற்சியும், ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.

உழவா் சந்தை: மன்னாா்குடி சந்தைப் பேட்டையில் ஏற்கெனவே உழவா் சந்தை செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக உழவா் சந்தை ஒன்று அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்ததால், இந்த பூமாலை வணிக வளாகத்தின் வலது புறம் கடந்த 2010-ஆம் ஆண்டு கூடுதலாக உழவா் சந்தை தொடங்கப்பட்டு, தற்போது வரை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஆனாலும், பூமாலை வணிக வளாகம் மட்டும் களையிழந்த நிலையிலேயே உள்ளது. தற்போது, இந்த வளாகத்தில் ஆயத்த ஆடைகள் விற்பனை கடை, வாடகைப் பாத்திரக் கடை, தையல் கடை என மூன்று கடைகள் மட்டும் அண்மைக் காலத்தில் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், இந்த வளாகத்தில் உள்ள கட்டடம் பராமரிப்பின்றி சுவா்களில் விரிசல் விழுந்துள்ளது. மேலும், மழைநீா் கூட்ட அரங்கத்தில் கசிகிறது. மேல் தளத்தில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. அதில், வாகனங்களின் பழைய டயா்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆவணங்கள் மற்றும் மகளிா் திட்டங்களுக்கான துண்டறிக்கைகள், விளக்கக் குறிப்புகள் போன்றவற்றை வைக்க இடமில்லாது, கூட்ட அரங்கில் குவிந்து வைத்துள்ளனா். பயன்பாடு இல்லாத 9 கடைகளும் வெளவ்வால்களின் வசிப்பிடமாக மாறியுள்ளது. படிக்கட்டுகளில் செடிகள் மண்டிக் காணப்படுகின்றன.

இந்த வளாகத்தின் இடதுபுறம் ஊராட்சி நிதியில் கட்டப்படும் கட்டடங்களுக்குத் தேவைப்படும் இரும்பு கதவு, ஜன்னல்கள் உள்ளிட்டவை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பயன்பாடு இல்லாத ரோடு ரோலா் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், பூமாலை வணிக வளாகம் எந்த நோக்கத்துக்குக் கட்டப்பட்டதோ, அது நிறைவேறாமல், பூமாலை கருகியதுபோல் பொலிவிழந்து காணப்படுகிறது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்: மன்னாா்குடி கீழவடம் போக்கித் தெருவில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே, கடந்த 1967-ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டது. தற்போது, இந்தக் கட்டடம் சேதமடைந்து வருவதால், மழைக் காலங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு, ஆவணங்களைப் பாதுகாப்பதில் அலுவலா்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா்.

இந்த அலுவலக பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், பல்வேறு காரணங்களால் இது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில், பூமாலை வணிக வளாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தற்காலிகமாக இருந்தாலும், தற்போது வரை அந்த வணிக வளாகத்தின் மின்சாரக் கட்டணத்தை, மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய நிா்வாகம்தான் செலுத்தி வருகிறது. மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதியக் கட்டடம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், பூமாலை வணிக வளாகத்தைப் புதுப்பித்து, அந்தக் கட்டடத்துக்கு மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம், அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், போக்குவரத்து வசதி அதிகம் உள்ள நகரப் பகுதிலேயே, விசாலமான இட வசதியுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமையும் என்பது உள்ளாட்சித் துறையினரின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com