ஏ.கே. சுப்பையா நினைவு தினம் அனுசரிப்பு

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நில பிரபுக்களிடம் பண்ணையாள்களாக சொந்த வீடற்ற நிலையில் இருந்து வந்த
Updated on
1 min read

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நில பிரபுக்களிடம் பண்ணையாள்களாக சொந்த வீடற்ற நிலையில் இருந்து வந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசு வீட்டுமனைப் பட்டா பெற்றுத்தர காரணமாக இருந்தவர் ஏ.கே. சுப்பையா என தமிழக அரசின் முன்னாள் தில்லி பிரதிநிநிதி அ. அசோன் புகழாரம் சூட்டினார்.
சித்தமல்லி கிராமத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏ.கே.சுப்பையாவின் நினைவுதினத்தையொட்டி, அவரது திருவுருவச்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி அவர் பேசியது: திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னர்குடி சட்டப் பேரவை தொகுதிகளில் மூன்று முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த பொதுவுடமை இயக்க மூத்த முன்னோடி ஏ.கே. சுப்பையா. இவர், கீழத்தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் பண்ணையாள்கள் முறையில் குடும்பத்தினருடன் கொத்தடிமைகளாக நேரம் காலமின்றி பணி செய்து வந்த நிலையில், சாட்டையடி, சாணிப்பால் என சொல்ல முடியாத அடக்குமுறைகளுக்கு ஆளான நிலையில் இருந்தவர்களை பி. சீனிவாசராவ், மணலி.சி. கந்தசாமி போன்றவர்களுடன் தென்பரை கிராமத்தில் களம் அமைத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். மேலும், அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியை வைத்து திருத்துறைப்பூண்டி அரசுமேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க காரணமாக இருந்தவர். அதன்பின்னர் மணலி கந்தசாமியுடன் இணைந்து தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்து அவருடன் பணியாற்றி பின்னர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்காக பாடுபட்டவர் என்றார் அசோகன். 
முன்னதாக ஊர்வலமாக கட்சி பேதமின்றி திரளானோர் வந்து முத்துப்பேட்டை மன்னார்குடி பிரதான சாலையில் உள்ள  ஏ.கே. சுப்பையாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். இதில், முன்னாள் எம்பி. எம். செல்வராஜ், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் குத்தாலம் ராஜமாணிக்கம், அருள்செல்வன், மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ். கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் பாலஞானி, ஆர்.எஸ். பாண்டியன் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஏ.கே. சுப்பையாவின் மகனும், மக்களவை முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com