15 ஆண்டுகளாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் சாலை..!

நிலம்,  நீர், ஆகாயம் போன்ற போக்குவரத்து தடங்களின் முதன்மையானது  சாலை போக்குவரத்து.
Updated on
2 min read

நிலம்,  நீர், ஆகாயம் போன்ற போக்குவரத்து தடங்களின் முதன்மையானது  சாலை போக்குவரத்து. மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு  ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் சென்று வருவதற்கு பெரிதும் துணையாக இருப்பது சாலை போக்குவரத்தே.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த சாலை போக்குவரத்து, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பகுதியில் சீரமைக்கப்படாமல் கவனிப்பாரின்றி இருப்பது அப்பகுதி மக்களையும், சமூக ஆர்வலர்களையும் வேதனையடையச் செய்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட ரஹ்மான்யத் தெருவில் 17-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு 130-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புக்குச் செல்லும் சாலை தான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இக் குடியிருப்புப் பகுதிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த சாலை சிதிலமடைந்துபோனது. இதனால், இந்தச் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாருக்கேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அவர்களை மருத்துவமனைக்கு வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது, மிகுந்த சிரமத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. எனவே, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து காணப்படும் இந்தச் சாலையை சீரமைத்துத் தருவதற்கு, கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால வலியுறுத்தலாகும்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தையல்காரர் பாட்சா கூறுயது:  இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது, சாலை பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்துள்ளது. இத்தெருவுக்கு அடுத்த தெருவில் உள்ள சம்பாக்கேணி குளத்திலிருந்து வாய்க்கால் மூலம் எதிரே ரஹ்மான்யத் தெருவில் உள்ள அஞ்சுக்கேணிக் குளத்துக்கு வரும் தண்ணீர் தற்போது வருவதில்லை. அந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வாய்க்காலின் நடுவே இத்தெருவில் உள்ள சிறிய பாலமும் சேதமடைந்து பல ஆண்டுகளாகிறது. மழைக் காலங்களில் குளத்தில் நீர் நிரம்பி, இந்தத் தெருவில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது என்றார்.
சேதமடைந்த இந்தச் சாலைக்கு, மாற்றுச் சாலை எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை. இத்தெருவில் வாய்க்காலை இணைக்கும் படியாக உடைந்த நிலையில் உள்ள சிறிய பாலமும் சீரமைக்கப்படவில்லை. குளத்தையொட்டி, முட்புதர்கள் மண்டிக் கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. கூத்தநால்லூர் நகராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, ரஹ்மான்யத் தெருவுக்குச் செல்லும் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என்கிறார் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்  எஸ்.எம். சமீர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ராஜகோபால் பதில் அளிக்கையில், தற்போது, மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, மே 23-ஆம் தேதிக்குப் பிறகு, ரஹ்மான்யத் தெருவுக்குச் செல்லும் சாலை ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com