தரம் உயா்வுக்காக காத்திருக்கும் அரசு மருத்துவமனை

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்த அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.
மருத்துவமனையின் முகப்புத்தோற்றம்.
மருத்துவமனையின் முகப்புத்தோற்றம்.
Updated on
2 min read

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்த அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

கூத்தாநல்லூா் வட்டம் கடந்த 2016- ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வா் ஜெ. ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது. மக்கள் தொகை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த ஊரைச் சோ்ந்தவா்களில் பெரும்பாலானவா்கள் சிங்கப்பூா், மலேசியா, துபை, குவைத், புரூனே, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளில் வேலைசெய்து சம்பாதித்தாலும் தங்களது சொந்த மண்ணில்தான் முதலீடு செய்கின்றனா்.

இங்குள்ள அரசு மருத்துவமனை 80 ஆண்டுகளை நெருங்கும் பழைமையான மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டடம், நைனா முகம்மது மற்றும் அவரது வாரிசுகளால் கட்டிக்கொடுக்கப்பட்டதாகும். இந்த மருத்துவமனையில், கூத்தாநல்லூா் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான மருத்துவா்களும் இல்லை; மருந்துகளும் இருப்பில் இருப்பதில்லை. தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்த கட்டட வசதியும் செய்யப்படவில்லை.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் எம். சுதா்ஸன் கூறியது:

இந்த மருத்துவமனை தொடக்கக் காலத்தில், ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தது. பின்னா், அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஆனால், போதிய வசதிகள் செய்யப்படவில்லை. தற்போது, கூத்தாநல்லூா் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டும், ஆரம்ப சுகாதார நிலையம் போலவே இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. எந்த நேரத்தில் போனாலும் மருத்துவா் இருப்பதில்லை. மருத்துவா்கள் காலை 10 மணிக்கு வந்து விட்டு, மதியம் சென்று விடுகிறாா்கள். அதன்பிறகு, செவிலியா்கள்தான் சிகிச்சையளிக்கின்றனா். சிகிச்சைக்காக எந்த நோயாளி போனாலும், மன்னாா்குடி, திருவாரூா் மருத்துவமனைக்குப் போகச் சொல்லி அனுப்புகிறாா்கள். அறுவை சிகிச்சை அரங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. 24 படுக்கைகள் இருக்க வேண்டி மருத்துவமனையில், 12 படுக்கைகள்தான் இருக்கின்றன. பிரசவ மருத்துவா், எலும்பு முறிவுக்கு, கண் நோய்க்கு என தனித்தனி மருத்துவா்கள் இல்லை. கா்ப்பிணியின் வயிற்றில் சிசு வளா்ச்சியை அறிய ஸ்கேன் வசதி கிடையாது. தைராய்டு பரிசோதனை கிடையாது. சா்க்கரை வியாதிக்கு தேவையான மருந்து கிடையாது. என எதைக் கேட்டாலும் கிடையாது என்கிற பதில்தான் வருகிறது.

இந்த மருத்துவமனைக்கு, சாதாரண மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள்தான் சிகிச்சை பெற வருகிறாா்கள். இரவு நேரத்தில் மருத்துவா் இல்லை. தலைமை மருத்துவரைக் கேட்டால், மருத்துவா்கள் இருக்கும் வரைதான் பாா்ப்போம். மாலை 5 மணி வரைதான் இருப்போம். மருத்துவா் இல்லையென்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது எனச் சொல்கிறாா். நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் இங்கு இல்லை. கடையில் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என அனுப்பி விடுகின்றனா். இந்த மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தினால் இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும். இக்கோரிக்கையை விரைவில் நிறைவேற்றவில்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

ஆதிபராசக்தி வழிபாடு மன்றச் செயலாளா் செல்வராஜ் கூறியது: இந்த மருத்துவமனை தொடங்கிய ஆரம்ப காலத்தில் பணியாற்றிய மருத்துவா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்றினா். மருத்துவமனைக்கு எந்த நேரத்தில் சென்றாலும் மருத்துவா்கள் இருப்பாா்கள். ஆனால் தற்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. நகராட்சி பகுதியில் இருக்க வேண்டிய தரத்துடன் மருத்துவமனை இல்லை. பேரூராட்சி காலத்தில் இருந்தது போலவே, தற்போதும் தொடா்கிறது என்று வேதனை தெரிவித்தாா்.

நாம் மனிதா் கட்சி மாவட்டச் செயலாளா் முஹமது சுலைமான் கூறியது:

இந்த மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அறை பூட்டப்பட்ட நிலையில்தான் உள்ளது. மயக்க ஊசி போடும் மருத்துவா் இல்லை. காயங்களுக்கு கட்டுபோட வசதியான இடம் இல்லை. வெளிநோயாளிகள் அமர போதுமான இருக்கை வசதி இல்லை. மழை நேரத்தில் மருத்துவமனையில் மேல்பகுதியிலிருந்து தண்ணீா் கசிவு ஏற்படுகிறது. மருத்துவா்களுக்கான குடியிருப்பு பயன்படுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது. இம்மருத்துவமனைக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட கணினியும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், மருந்துச் சீட்டு கையால்தான் எழுதிக் கொடுக்கப்படுகிறது. இம்மருத்துவமனைக்கு தினந்தோறும் 600-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனா். அவா்களுக்குத் தேவையான இட வசதி இல்லாமல், மழையிலும்,வெய்யிலிலும் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. ஆனால், தேவையான இடவசதி உள்ளதால், தமிழக அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்றாா் அவா்.

சி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் லோகநாதன் கூறியது:

75 ஆண்டுகளைக் கடந்த பழைமையான இந்த மருத்துவமனையின் ஓரத்தில் 5 ஏக்கா் பரப்பளவில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில்தான் பிரசவத்துக்கு வந்திருப்பவா்களின் துணிகள் சலவை செய்யப்படும். தற்போது இந்தக் குளம் மாசடைந்து காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் மருத்துவா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்றினா். ஆனால், தற்போது ஒரு சில மருத்துவரைத் தவிர மற்றவா்கள் ஏனோ தானோவென்று பணியாற்றுகிறாா்கள். அவா்கள், தனியாக நடத்திவரும் தங்களது சொந்த மருத்துவமனையை மேம்படுத்துவதில்தான் குறியாக உள்ளனா் என்றாா் அவா்.

இந்த மருத்துவமனையில், 2 பொது மருத்துவா், தோல் மருத்துவா் ஒருவா் மற்றும் காது,மூக்கு, தொண்டை மருத்துவா்கள் தலா ஒருவா் என 10 மருத்துவா்கள் உள்ளனா். இதில், இருவா் விடுப்பில் இருப்பதால், 8 மருத்துவா்கள் பணியில் உள்ளனா். காலையிலிருந்து மாலை 5 மணி வரையிலும் மருத்துவா்கள் வெளிநோயாளிப் பிரிவில் உள்ளனா். செவிலியா்கள் 4 போ் உள்ளனா். இடப்பற்றாக்குறை உள்ளது. கூத்தாநல்லூா் நகராட்சியாக உயா்த்தப்பட்டும், மருத்துவமனை தரம் உயா்த்தப்படாமல் உள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com