திருவாரூரில் மனுநீதிச் சோழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் கட்டப்பட்ட மணிமண்டபம், தற்போது குப்பை அள்ளும் வண்டிகள் நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தப்படுவது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரின் பெருமைக்குரிய முக்கிய விழுமியங்களில் நீதி வழுவாத மன்னன் மனுநீதிச் சோழனின் ஆட்சி முறையும் ஒன்றாகும். திருவாரூரில் இருந்து சோழ நாட்டை ஆண்ட மன்னரான மனுநீதிச் சோழனின் மகன் தேரில் சென்றபோது கன்றுக்குட்டி ஒன்று, தேர்க்காலில் சிக்கி இறந்தது. இதனால், தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடிக்க, நிகழ்ந்ததை அறிந்த மன்னன், தனது மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று, பசுவின் துயரைப் போக்கி, நீதியை நிலை நாட்டினான் என்பது வரலாறு.
இத்தகைய பெருமைக்குரிய மனுநீதிச்சோழனின் நெறி பிறழாத ஆட்சி முறையே, நெறிதவறாத நீதிக்கு உதாரணமாக இன்றளவும் நீதியாளர்களாலும், ஆட்சியாளர்களாலும் போற்றப்பட்டு வருகிறது.
சிறப்பு வாய்ந்த மனுநீதிச் சோழனுக்கு திருவாரூரில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழ அரசு, திருவாரூர் பனகல் சாலையில் இருந்த சோமசுந்தரம் நகராட்சி பூங்காவில் ரூ.1.10 கோடி மதிப்பில் மனுநீதிச் சோழனுக்கு மணிமண்டபம் கட்டியது. மேலும், கம்பீரத் தோற்றத்தில் மனுநீதிச் சோழனின் சிலை அமைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தை 2017 மார்ச் 7- ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்.
மணிமண்டபத்தின் நுழைவுவாயிலின் இடது புறத்தில், சிறிய மண்டபமும், சில நாற்காலிகளும் அமைக்கப்பட்டிருந்தன. மணி மண்டபம் திறக்கப்பட்ட புதிதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் சென்றனர். ஆனால், தற்போது மணிமண்டபத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கம் அளவிலேயே உள்ளது. சில நாள்களில் மக்கள் யாருமின்றி மணிமண்டபம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கு காரணம், நகராட்சியின் குப்பை அள்ளும் வண்டிகள் அங்கு நிறுத்தப்படுவதுதான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மணிமண்டபம் உள்ள பகுதி நகராட்சி பூங்காவாக இருந்தபோது, ஏராளமான மக்கள் வருகை தந்தனர். திருவாரூரில் பொழுதுபோக்குக்கென எவ்வித சிறப்பம்சங்களும் இல்லாத நிலையில், இந்த பூங்காவே மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளை பூர்த்தி செய்தது. குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கல் அமைப்பு உள்ளிட்டவை இருந்தன. அதேபோல், அங்கு வரும் செய்தித்தாள்களை படிக்கவும் ஏராளமானோர் காலை நேரங்களில் வருவர். மேலும், மாலை நேரங்களில் சிறுவர்களும், முதியவர்களும் பூங்காவுக்கு வந்து விளையாடி, மகிழ்ச்சியாக செல்வது வழக்கமாக இருந்தது.
மணிமண்டபமாக மாறிய பிறகும் கூட, மக்கள் கூட்டம் அதிகமாகவே வந்து சென்றது. நாளடைவில் மணிமண்டபத்துக்கான பொலிவை இழந்ததால் மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலர் ஆர். ரமேஷ் கூறியது:
மணிமண்டபம் உள்ள இடம் பூங்காவாக இருந்தபோது, மக்கள் அமர்வதற்கு ஆங்காங்கே நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது அமர்வதற்கான அமைப்பு எதுவும் இல்லை. மணிமண்டபத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இருக்கை வசதியை சமூக விரோதிகள் உடைத்துவிட்டனர். இதனால், மக்கள் இங்கு வர தயங்குகின்றனர். மணிமண்டபத்துக்கும் அருகில் உள்ள கடைக்கும் இடையே எவ்வித குறுக்குச் சுவரும் இல்லை. இதனால், அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், மணிமண்டபத்தில் அமர்ந்து உணவு உண்பதால், மணிமண்டபத்தில் அமரும் இடத்தையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மணிமண்டபத்தின் ஒரு பகுதியில், குழந்தைகள் விளையாடுவதற்கென பூங்கா அமைத்தால் சிறுவர்களும் பழையபடி இங்கு வந்து விளையாடுவதற்கு வசதியாக இருக்கும் என்றார்.
இதுகுறித்து, திருவாரூர் நகர்ப் பகுதியைச் சேர்ந்த எம். மணிகண்டன் கூறியது: இந்த மணிமண்டபத்தில், திருவாரூர் நகராட்சிக்குரிய துப்புரவு அலுவலகம் உள்ளது. மனுநீதிச் சோழன் சிலை உள்ள கட்டடத்துக்கு அருகிலேயே இந்த அலுவலகம் உள்ளது. இதனால், குப்பை வண்டிகள் மனுநீதிச் சோழன் சிலைக்கு எதிரிலும், சுற்றிலும் உள்ள காலி இடங்களிலும் நிறுத்தப்படுகின்றன. இதனால், மணிமண்டபத்துக்கு வர மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே, துப்புரவு அலுவலகத்தை வேறு இடத்துக்கு இடம் மாற்றலாம் அல்லது குப்பைகளை அள்ளிச் செல்லும் வண்டிகளை மணிமண்டபத்துக்குள் வருவதற்கு தடை செய்து, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், மக்கள் உட்காரும் இடங்களில், இரவு நேரங்களில், சில சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. பகலில் கூட இங்கு அமர்ந்து மது அருந்துவதாகவும் தெரிகிறது. எனவே, இந்த மணிமண்டபத்தை சுற்றிலும், பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தி, தூய்மையை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நகராட்சி விளக்கம்: இதுகுறித்து, நகராட்சி தரப்பில் தெரிவிக்கையில், "மணிமண்டபத்துக்கு மக்கள் அதிகமாக வராததால், சில சமூக விரோதச் செயல்கள் நடைபெற்றது உண்மைதான். இதனால், அங்கு உரிய பராமரிப்பை ஏற்படுத்துவதற்காகவே, துப்புரவு அலுவலகத்தை கொண்டு சென்றோம். தற்போது, மணிமண்டபத்தை தினமும் சுத்தப்படுத்தும் வேலைகள் நடைபெற்று, உரிய முறையில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு, அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற உள்ளோம் என்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு: மணிமண்டபங்கள் வெறும் பொழுது போக்குவதற்காக அல்ல. யார் பெயரில் அவை உருவாக்கப்படுகின்றதோ அவரின் பெருமைகளை கூறுவதாக இருக்க வேண்டும். ஆனால், நீதியைக் காக்க வேண்டி தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனின் மணிமண்டபம், தனது பொலிவை இழந்து வருகிறது. எனவே, மனுநீதிச் சோழன் வரலாற்றை கூறும் வகையில் அங்கு கண்காட்சியை ஏற்படுத்த வேண்டும். அதேபோல், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பயன்படுத்தும்படி பூங்காவையும் ஒருபுறத்தில் அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.