உரிய ஆவணங்கள் தாக்கல் செய்ததால் ரூ.12.81 லட்சம் விடுவிப்பு
By DIN | Published On : 01st April 2019 07:55 AM | Last Updated : 01st April 2019 07:55 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டத்தில், தேர்ததல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 66,97,586- இல் உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதால், ரூ.12,81,287 விடுவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாக்காளர் தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்தல் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம்பெற பொதுமக்கள் 1950 என்ற எண்ணில் இலவசமாக தொடர்பு கொள்ளலாம். இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தகவல் மையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இதுவரை, 1973 அழைப்புகள் பெறப்பட்டு பொதுமக்களுக்கு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1800-425-7035 என்ற இலவச தொலைபேசி எண்ணும், 04366-226120, 226121, 226123 ஆகிய தொலைப்பேசி எண்களும் தரப்பட்டுள்ளன. இதில், இதுவரை தெரிவிக்கப்பட்ட 34 புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள சிவிஜில் மொபைல் அப்ளிகேஷனில் பொதுமக்களிடமிருந்து இதுவரை பெறப்பட்ட 18 புகார்கள் உடனடியாக தொடர்புடைய பறக்கும் படையினருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்க திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில், தொகுதிக்கு 9 குழுக்கள் வீதம் 36 பறக்கும் படை குழுக்களும், தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 12 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
தவிர இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் சட்டப் பேரவை தொகுதிக்கு கூடுதலாக 3 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுக்கள் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் காவல் துறை சோதனைச் சாவடி குழுக்கள் மேற்கொண்ட வாகன சோதனைகளில் இதுவரை உரிய ஆவணகளின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.66,97,586 கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தொகைக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் ரூ.12,81,287 விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நன்னிலம் சட்டப் பேரவை தொகுதி பறக்கும் படையினரால் மார்ச் 29-இல் குடவாசல் வட்டம் மூலங்குடி அருகே வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 83 லட்சம் நன்னிலம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வருமானவரித் துறை துணை இயக்குநரால் (புலனாய்வு) விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.83 லட்சம், எக்விடாஸ் நிறுவனத்தின் திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி கிளைகளுக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் அத்தொகை விடுவிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.