எதிர்கால உலகம் பொறியாளர்கள், அறிவியல் விஞ்ஞானிகள் கையில் உள்ளது: மத்தியப் பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
By DIN | Published On : 01st April 2019 07:54 AM | Last Updated : 01st April 2019 07:54 AM | அ+அ அ- |

எதிர்கால உலகின் வளர்ச்சி பொறியாளர்கள் மற்றும் அறிவியல் விஞ்ஞானிகள் கையில்தான் உள்ளது என்று திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர் ரகுபதி பேசினார்.
மத்தியப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூலக்கூறு அறிவியல் துறையின் சிறப்பு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து அவர் பேசியது: இன்றைய நவீன உலகில் அனைத்துமே அறிவியல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் உள்ளது. விஞ்ஞானம் இன்றி இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகத்தில் எதிர்கால பொருளாதாரம், சமூக வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம் ஆகிய அனைத்துமே பொறியாளர்கள் மற்றும் அறிவியல் விஞ்ஞானிகள் கையில்தான் உள்ளது.
எனவே, பொறியாளர்களும் அறிவியல் விஞ்ஞானிகளும் உலக சமுதாய வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்காற்ற வேண்டியுள்ளது. இதை மனதில் கொண்டு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ரகுபதி.
இயற்பியல் துறைத் தலைவர் கவிதா, உதவி பேராசிரியர் சந்திரசேகரன், வேதியல் துறை உதவிப் பேராசிரியர் ராம்குமார், மூலக்கூறு அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களின் துறை சார்ந்த கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
மூலக்கூறு அறிவியல் துறை பயிற்சிப் பட்டறையில் துறைத் தலைவர் பீர்முகமது வரவேற்றார். இத்துறையின் உதவிப் பேராசிரியர் மல்லிகா அர்ஜுனா ரெட்டி நன்றி கூறினார்.