"குழந்தைகளை வளர்ப்பது மிகப் பெரிய பொறுப்பு'
By DIN | Published On : 01st April 2019 07:55 AM | Last Updated : 01st April 2019 07:55 AM | அ+அ அ- |

குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு என்று கல்வியாளர் பர்வீன் சுல்தானா பேசினார்.
திருவாரூர் அருகேயுள்ள வண்டாம்பாளை விவேகானந்த வித்தியாஷ்ரம் கல்வி நிலையத்தில் இரண்டு நாள் கல்வி நிலைய 6-ஆம் ஆண்டு விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு போட்டிகள் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியது:
குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களின் முன்னேற்றத்தை நாம் காண முடியும். கல்வி நிலையங்களில் குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பான செயல். இதேபோல், குழந்தைகளை நல்ல கல்வி நிலையத்தில் சேர்த்து விட்டோம் என்று பெற்றோர்களும் சும்மா இருந்துவிட கூடாது.
குழந்தைகளின் வளர்ச்சியில் மிகப் பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் உண்டு. ஒரு மாணவரோ, மாணவியரோ அதிக மதிப்பெண் எடுப்பது மட்டுமே அவரது வளர்ச்சியாக கருதிவிட முடியாது. அனைத்து திறனும் ஒருங்கே வளர வேண்டும். அதுதான் ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சி. எனவே, குழந்தையை வளர்த்தெடுப்பதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முழு மனதோடு முழு ஈடுபாட்டோடு வளர்க்க வேண்டும். அந்தக்கால குழந்தைகளைப்போல் இன்றி இந்தக் கால குழந்தைகள் மிகச் சிறிய வயதிலேயே நுண்ணிய அறிவு படைத்தவர்களாகவும் அனைத்தையும் அறிந்து கொள்ளும் திறன் உடையவர்களாக உள்ளனர். எனவே, அதை பயன்படுத்தி அந்த குழந்தைகளை அனைத்து கோணங்களிலும் சிறந்தவர்களாக வளர்க்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் பர்வீன் சுல்தானா.
பள்ளித் தாளாளர் ஜனகமலா, பள்ளி முதல்வர் சுஜா. எஸ். சந்திரன், பள்ளி துணை முதல்வர் சித்ரா மோகன், ஆசிரியர் மெர்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.