8 வழிச் சாலை திட்டம்: விவசாயிகள் சங்கம் வரவேற்பு
By DIN | Published On : 11th April 2019 07:28 AM | Last Updated : 11th April 2019 07:28 AM | அ+அ அ- |

சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை வரவேற்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலர் வே. துரைமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: சென்னை, சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 மாவட்டங்கள் வழியாக 8 வழிச் சாலை அமைப்பதற்கான அறிவிப்பு ஆணையை கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு வெளியிட்டது. இச்சாலை அமைக்க சுமார் 2,343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இச்சாலை அமைக்க எடுக்கப்படும் நிலங்களில் 120 ஏக்கர் வரை வனப்பகுதி நிலங்கள் ஆகும். நிலங்கள் எடுப்பதால், பெரும்பாலான விளைநிலங்கள் பாதிக்கப்படும். மரங்கள் வெட்டப்பட்டு வனங்கள் அழியும். 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாசனக் கிணறுகளும், 100-க்கும் அதிகமான குளங்களும், பல ஆயிரம் வீடுகளும் அழிவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வனவிலங்குகளும், பறவைகளும் அழிந்து போகும்.
இத்திட்டம் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டு வாழ்வாதாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டது. இச்சாலை அமைப்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு என்று கூறினாலும் மக்களுக்கு பெரிதும் பயன்படாது என்பதே எதார்த்தம். அந்த வழியாக ஏற்கெனவே மூன்று வழிச்சாலைகள், நான்கு வழிச் சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. சில பன்னாட்டு நிறுவனங்கள் சேலம் மாவட்ட மலையோரங்களில் பொதிந்து கிடக்கும் கனிம வளங்களை எடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன எனவும், அந்த நிறுவனங்களின் வசதிக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளன என்ற செய்திகளும் வருகின்றன. இச்சூழலில் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகளும், விவசாய சங்கங்களும் இணைந்து பல போராட்டங்களை நடத்தின.
நீதிமன்றத்திலும் இத்திட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் மீது உயர்நீதிமன்றம் 8 வழிச் சாலைக்கான அரசாணையை ரத்து செய்தும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரத்துக்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்பதோடு, இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு தமிழ்நாடு அரசு செல்லக்கூடாது எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.