மன்னார்குடி கோயில் பங்குனித் திருவிழா நிறைவு: இன்று விடையாற்றி தொடக்கம்
By DIN | Published On : 12th April 2019 07:33 AM | Last Updated : 12th April 2019 07:33 AM | அ+அ அ- |

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்ற 18 நாள் பங்குனித் திருவிழா, வியாழக்கிழமை சப்தாவர்ணம் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல்12) தொடங்குகிறது.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா 18 நாள்கள் நடைபெறும், இதைத் தொடர்ந்து 12 நாள்கள் விடையாற்றி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான விழா, கடந்த மார்ச். 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாக்களான வெள்ளி ஹம்ச வாகனம், கண்டபேரணிட பக்ஷி, தங்கசூரியபிரபை, வெண்ணெய்த்தாழி, வெட்டுங்குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண்ணன், ராஜ, மரவுரிராமர், பட்டாபிராமர், வேணுகோபாலர், ராமர், செட்டி, வையாளி அலங்காரங்களிலும் உத்ஸவர் ராஜகோபால சுவாமி அருள்பாலித்தார். திருத்தேரோட்டத்தில் சத்யபாமா,ருக்மணி சமேதராக உத்ஸவர் எழுந்தருளினர்.
பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளான 18-ஆம் நாள் விழாவையொட்டி, வியாழக்கிழமை காலையில் கோயிலில் திருவாய்மொழி சேவையும், மதியம் திருமஞ்சனமும் நடைபெற்றது. இரவு, சப்தாவர்ணத்தில் புஷ்ப அலங்காரத்தில் சத்யபாமா, ருக்மணி சமேதராக உத்ஸவர் ராஜகோபாலசுவாமி அருள்பாலித்தார்.
18 நாள் திருவிழாவினை தொடர்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 23-ஆம் தேதி திருக்கோயிலின் வலதுபுறம் உள்ள கிருஷ்ணதீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது.