சித்திரைப் பட்டத்தில் கம்பு பயிரிடும் முறை: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

சித்திரைப் பட்டத்தில் கம்பு பயிரிடுவது குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆ. ராஜேஷ்குமார் மற்றும் மு. ராமசுப்பிரமணியன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.


சித்திரைப் பட்டத்தில் கம்பு பயிரிடுவது குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆ. ராஜேஷ்குமார் மற்றும் மு. ராமசுப்பிரமணியன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கம்பு பயறு மாசி மற்றும் சித்திரைப் பட்டத்தில் இறவையிலும், ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்தில் மானாவாரியிலும் பயிரிடப்படுகிறது. இப்பயறுக்கு குறைந்த தண்ணீர் (300- 450 மில்லி) போதுமானது. ஆகையால், சித்திரைப் பட்டத்தில் குறைந்த நீரைப் பயன்படுத்தி, கம்பு பயறு சாகுபடி  செய்வது குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
கம்பு- பட்டம் மற்றும் ரகங்கள்: சித்திரைப் பட்டம் (மார்ச் - ஏப்ரல்) பயிரிடுவதற்கு ஏற்ற ரகங்கள் கோ 7, கோ 9, கோ (சியு) 9 ஜசிஎம்வி 221, த.வே.ப. வீரிய கம்பு கோ 9, கோ 10.
நாற்றங்கால்: ஒரு ஹெக்டேர் நிலத்துக்குத் தேவையான நாற்றுகளைப் பெறுவதற்கு 7.5 சென்ட் நாற்றங்கால் நிலம் போதுமானது.
விதைப்பு மற்றும் விதைகளை மூடுதல்: நாற்றங்கால் படுக்கையில் விரல்கள் மூலம் 1 செ.மீ. குறைவானஆழத்தில் சிற்றோடை திறக்க வேண்டும். 7.5 சென்ட்டில் 3.75 கிலோ விதைகள் தேவை (0.5 கிலோ சென்ட்). 500 கிலோ தொழு உரம் அல்லது மக்கிய உரம் தூவி விதைகளைக் கைகளால் மிருதுவாக மூட வேண்டும்.
தொழுஉரம் இடுதல்: ஹெக்டேருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது மக்கிய உரத்தை உழுவதற்கு முன் இட வேண்டும். ஹெக்டேருக்கு அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட்டுகள் மற்றும் பாஸ்போபாக்டீரியா 10 பாக்கெட்டுகள் (அல்லது) அசோபாஸ் 20 பாக்கெட்டுகளை 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழுவுரத்துடன் கலந்து இட வேண்டும்.
படுக்கை அமைத்தல்: சால் மற்றும் வரப்புகளை (3 வரப்புகளுக்கு) 6 மீ. நீளம் மற்றும் 45 செ.மீ. அகலம்  கொண்டு அமைக்க வேண்டும். தானியங்களை ஊடுபயிர்களில் விதைக்கும்போது வரப்பு  6 மீ. நீளம் 30 செ.மீ இருக்கவேண்டும்.
உர மேலாண்மை: தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பால் சத்து ஆகியவற்றை ஹெக்டேருக்கு 70: 35: 35 என்ற விகாதாசார அடிப்படையில் இட வேண்டும். 
நுண்ணூட்டச் சத்துக் கலவையின் பயன்பாடு: 12.5 கிலோ ஹெக்டேர் நுண்ணூட்டக் கலவை அல்லது 25 கிலோ துத்தநாக சல்பேட்டு அளிக்க வேண்டும். மேலே கூறியவற்றை போதுமான மண் கொண்டு 50 கிலோவாக கலந்து அளிக்க வேண்டும்.
நாற்று நடுதல், விதைத்தல்: 15 முதல் 18  நாள்கள் வயதிருக்கும் நாற்றுகளை நட வேண்டும். எல்லா ரகத்துக்குமான இடைவெளி 45 செ.மீ. இருக்க வேண்டும். நடவு ஆழம் 3 முதல் 5 செ.மீ. இருக்க வேண்டும்.
வேரை உயிர் உரங்களோடு நனைத்தல்: ஹெக்டேருக்கு அசோஸ்பைரில்லம் 5 பாக்கெட்டுகள் மற்றும் பாஸ்போபாக்டீரியா 5 பாக்கெட்டுகள் அல்லது அசோஃபாஸ் 10 பாக்கெட்டுகள்  இவற்றை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றுகளை நடுவதற்கு முன்பு  15- 30 நிமிடங்கள் நனைக்க வேண்டும்.
நேரடி விதை விதைத்தல்: கம்பு விதைகளை 2 சதவீத பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சதவீத சோடியம் குளோரைடில் 16 மணிநேரம் ஊறவைத்தபின், 5 மணிநேரம் நிழலில் உலர்த்துவதால் விதையின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். வாய்க்கால் முறையில் நடவுசெய்வதற்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைகளின் இடைவெளி 4-5 செ.மீ. இருக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 1,45,000 பயிர் எண்ணிக்கை இருக்க வேண்டும். 
களை மேலாண்மை: விதைத்த 3 நாள்களுக்குப் பிறகு களை முளைப்பதற்கு முன்பு அட்ராசைன் 0.25 கிலோ ஹெக்டேர் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து பேக்- பேக் தெளிப்பான் உதவியால் தெளிக்கவும். விதைத்த 30- 35 நாள்களுக்குப் பிறகு கையால் களையெடுக்கவும். 
மேலுரமிடுதல்: நாற்று நட்டு அல்லது நேரடி விதைத்த 15 மற்றும் 30 நாள்களில் நைட்ரஜனை மேலுரமாக இட வேண்டும். நாற்று நடுதலாக இருந்தால் ஒரு குச்சியால் 5 செ.மீ. ஆழத்துக்கு குழியைத் தோண்டி, அதன் அடியில் உரத்தை வைத்து மூடவேண்டும்.
நீர் மேலாண்மை: மண்ணின் தன்மைக்குத் தகுந்தாற்போல், நாற்றுநட்ட பிறகு அல்லது விதை விதைத்தப் பிறகு 5-இலிருந்து 8 முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.  
அறுவடை: இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறி உலர்ந்த தோற்றத்தில் இருக்கும். தானியங்கள் கடினமாக இருக்கும். எனவே, தானியக் கதிரைத் தனியாக அறுக்க வேண்டும். 
கதிரெடுத்தல், தூய்மை செய்தல், உலர்த்துதல், சேமித்தல்: 10 சதவீதம் குறைவான ஈரப்பதம் உள்ளவாறு தானியத்தை உலரவிட்டு, 100 கிலோ தானியத்துக்கு 1 கிலோ வீதம் வெண் களிமண் கலப்பதால், அரிசி அந்துப்பூச்சித் தாக்குதலைக் குறைக்கலாம். சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள பைகளின் மீது மாலத்தியான் 50 இசியை, 100 சதுர மீட்டருக்கு 3 லிட்டர் வீதம் தெளிக்க வேண்டும் என அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com