நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் உரிமம் ரத்து
By DIN | Published On : 26th April 2019 01:20 AM | Last Updated : 26th April 2019 01:20 AM | அ+அ அ- |

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரின் உரிமம் ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை சிவப்பிரியா நகரைச் சேர்ந்த சுகுமார் மனைவி பிரேமாவதி (45). இவர், மார்ச் 26-ஆம் தேதி மயிலாடுதுறையிலிருந்து சிவப்பிரியா நகருக்குச் செல்ல, கும்பகோணத்தில் இருந்து சீர்காழி நோக்கி வந்த தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அந்தப் பேருந்து சிவப்பிரியா நகரில் நிற்காமல் சென்றுள்ளது.
இதுகுறித்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர், தஞ்சை மண்டல போக்குவரத்து ஆணையர், நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு பிரேமாவதி புகார் மனு அனுப்பினார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரிடமிருந்து வந்த பதிலில் 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இதுதொடர்பாக மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில், தனியார் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் நடந்துகொண்ட விதத்தைக் கண்டித்து, ஒரு மாதத்துக்கு அவர்களது உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி புதன்கிழமை உத்தரவிட்டார்.