நீர்வளத்தைப் பாதுகாப்பது அவசியம்: எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தல்

நீர்வளத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தினார்.
Updated on
1 min read

நீர்வளத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தினார்.
ஜல் சக்தி அபியான் இயக்கத்தின் சார்பில் நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பெருவிழா,  நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில்  வியாழக்கிழமை நடைபெற்றது. மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா  தலைமை வகித்து குறுந்தகடு, புத்தகம்  மற்றும் கையேட்டை வெளியிட்டுப் பேசியது:
அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப எதிர்காலத்தில் உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் சரியன திட்டமிடலுடன் சாகுபடி செய்ய வேண்டும். இதற்கு, டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும். நீர்வளத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்றார் அவர்.
கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கக் கல்வி இயக்குநர் மு. ஜவாஹர்லால் பேசும்போது, "விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சமயங்களில் மாற்றுப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு முன்வர வேண்டும்' என்றார்.
ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய  இயக்குநர் வெ. அம்பேத்கர், பல்வேறு புதிய நெல் ரகங்கள் குறித்தும், தஞ்சாவூர் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் ச. பொற்பாவை, நெல் சாகுபடியில் பல்வேறு முறைகள் மற்றும் நீர் பயன்பாடு குறித்தும், வேளாண்மை இணை இயக்குநர் டி. சிவக்குமார், வேளாண்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில மற்றும் மத்திய அரசுகளின் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறினர்.
தோட்டக்கலை துணை இயக்குநர் ஏ.இ. சுரேஷ்குமார், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் பாட்ரிக் ஜாஸ்பர், கால்நடைத் துறை உதவி இயக்குநர் ஜான்ஸன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தஞ்சாவூர் வேளாண்மைக் கல்லூரி இணைப் பேராசிரியர் செந்தில்குமார், உதவிப் பேராசிரியர் ஆ. காமராஜ் ஆகியோர் நீர் மேலாண்மை குறித்துப் பேசினர்.
முன்னதாக நடைபெற்ற விவசாயக் கண்காட்சியை எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா  திறந்துவைத்து, அனைத்து அரங்குகளையும் பார்வையிட்டார். இக்கண்காட்சியில் நெற்பயிரில் சிக்கன நீர்பாசனத்திற்கேற்ற வயல் நீர்க் குழாய், திருந்திய நெல் சாகுபடி முறை, நேரடி நெல் விதைப்பு, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு, பல்வேறு பயிர்களுக்கு தேவைப்படும் நீர் மற்றும் நீர்ப் பாசனத்தை அளவிடும் முறைகள் குறித்து மாதிரி கொண்டு விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், நீர் மேலாண்மை குறித்து நடைபெற்ற கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வேளாண் அலுவலர்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்மு. ராமசுப்பிரமணியன் வரவேற்றார். மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் அ. அனுராதா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com