கூத்தாநல்லூரில் இருதரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இருவர் கத்தியால் குத்தப்பட்டனர்.
கூத்தாநல்லூர் பாண்டுக்குடி, விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி (32) என்பவரை மரக்கடை, தெற்குத் தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் (40) கிண்டல் செய்தாராம். இதனால், ஆத்திரமடைந்த பக்கிரிசாமி, தனது மூத்த சகோதரரான பாண்டுக்குடி, மேலத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்தை (48) அழைத்துக்கொண்டு, கூத்தாநல்லூர் பாய்க்காரப்பாலம் அருகேயுள்ள மீன் மார்க்கெட்டில் வைத்து சுப்ரமணியனை பக்கிரிசாமி கத்தியால் குத்தினாராம். அப்போது, சுப்பிரமணியனும் தான் வைத்திருந்த கத்தியால் பக்கிரிசாமியை குத்தியதாகத் தெரிகிறது. மேலும், ஆறுமுகமும் தாக்கப்பட்டார்.
இதில் காயமடைந்த மூவரும், கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று, தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து, கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.