மாவட்டக் கருவூலத்தில் கணினி திருட்டு: ஆட்சியர் அலுவலக உதவியாளர் கைது: காவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 12th February 2019 09:08 AM | Last Updated : 12th February 2019 09:08 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டக் கருவூல அலுவலகத்திலிருந்து கணினி திருட்டுப்போனது தொடர்பாக, ஆட்சியர் அலுவலக உதவியாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்து விட்டு, கருவூலத்தில் இருந்த கணினியை அடையாளம் தெரியாத நபர் திருடிச்சென்றிருந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை உத்தரவின்படி திருவாரூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் என். நடராஜன் மேற்பார்வையில் திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சிவசெந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேரிடர் மேலாண்மை துறையில் உதவியாளராகப் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, கனக்கண் குப்பத்தைச் சேர்ந்த புத்திரன் மகன் பூபதி (38) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு பாதுகாவலராக பணிபுரியும் கோபால் மகன் ராஜேந்திரன் (51) என்பவருடன் விரோதம் இருந்ததாகவும், அதனால் ராஜேந்திரனின் இருசக்கர வாகனத்துக்கு தீவைத்ததாகவும், இதை திசை திருப்பவே கருவூலத்தில் இருந்த கணினியை திருடிச் சென்றதாகவும் ஒப்புக் கொண்டாராம். இதையடுத்து, பூபதியை கைது செய்த போலீஸார்அவரிடமிருந்து கணினியையும் கைப்பற்றினர். இதையொட்டி, தனிப்படையினரை திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை நேரில் அழைத்துப் பாராட்டுத்
தெரிவித்தார்.
4 காவலர்கள் பணியிடை நீக்கம்
மாவட்டக் கருவூல அலுவலகத்தில் கணினி திருட்டு நடந்த அன்று, பணியிலிருந்த சவிதா, முருகலெட்சுமி, கனகம்பாள், அஞ்சலி ஆகிய 4 போலீஸார் கவனக்குறைவாக செயல்பட்டதாக அவர்கள் நான்கு பேரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.