கஜா புயல் நிவாரணம் கோரி காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:26 AM | Last Updated : 04th January 2019 08:26 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் கஜா புயல் நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக வழங்கக் கோரியும் அதிமுகவைத் தவிர்த்து மற்ற கட்சிகள் சார்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கஜா புயல் நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரியும் பல்வேறு கட்சிகள் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.எஸ். பாண்டியன் தலைமை வகித்தார்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எம். முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கே.ஜி. ரகுராமன், காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் பி. எழிலரசன், தமாகா நகர செயலாளர் கோவிந்தசாமி, அமமுக தாஜுதீன், மதிமுக கோவி.சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வி. த. செல்வன், திராவிடர் கழகம் சார்பில் சு. சித்தார்த்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டக் குழுவினருடன் நகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காத்திருப்புப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.