சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்கு
By DIN | Published On : 04th January 2019 08:29 AM | Last Updated : 04th January 2019 08:29 AM | அ+அ அ- |

அரசு மருத்துவரை தாக்கியதாக பாஜக மாவட்டத் தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமங்களில் சுகாதாரத் துறை சார்பில் அண்மையில் நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், மலேரியா நோய்த் தடுப்பு மாத்திரை உட்கொண்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது.
இவர்களை, திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பேட்டை சிவா, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு, மருத்துவருக்கும் பேட்டை சிவாவுக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அரசு மருத்துவர் தாக்கப்பட்டாராம்.
இதுதொடர்பாக பேட்டை சிவாவை போலீஸார் கைது செய்தனர். இதைக் கண்டித்து, திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் கடந்த திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, முத்துப்பேட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக, பாஜக மாவட்டச் செயலாளர் இளசுமணி, நகர செயலாளர் வினேத், மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் ராகவன் உள்ளிட்டோர் மீதும், முத்துப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து, ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீதும் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.