நெகிழித் தடை: அதிகாரிகளைக் கண்டித்து போராட்டம்: வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் விக்கிரமராஜா
By DIN | Published On : 04th January 2019 08:25 AM | Last Updated : 04th January 2019 08:25 AM | அ+அ அ- |

நெகிழித் தடை விவகாரத்தில், அதிகாரிகளின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியது:
நெகிழித் தடைக்கு வணிகர் சங்கப் பேரவை சார்பில் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். ஆனால் தூத்துக்குடி, கோவில்பட்டி, கயத்தாறு, நெல்லை, புளியங்குடி, சேலம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல ஊர்களில் அரசு அதிகாரிகள் கடைக்குள் புகுந்து பொருள்களை அள்ளிச் செல்கின்றனர். அவற்றை கணக்கிடுவதும் இல்லை, கணக்கு காண்பிப்பதும் இல்லை.
உள்நாட்டு வணிகத்தை முடக்கிவிட்டு வெளிநாட்டு வணிகத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. இதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். சென்னையில் நடைபெறவுள்ள அனைத்து நிர்வாகிகள் கூட்டத்தில், அதிகாரிகளின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்து, கடையடைப்புப் பேராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும் என்றார் அவர். பேட்டியின்போது மண்டலத் தலைவர் எல். செந்தில்நாதன், நகர வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ். செந்தில்குமார், செயலர் எம். கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.