புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: 5 பேர் கைது
By DIN | Published On : 04th January 2019 08:25 AM | Last Updated : 04th January 2019 08:25 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம் சித்தாலத்தூர் கிராமத்தில் ராஜேந்திரன் மகன் வினோத் (32) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குமாரசாமி, ராஜ்மோகன், சக்திவேல், முருகானந்தம், சுந்தரராஜன் ஆகியோர் திங்கள்கிழமை நள்ளிரவில் அப்பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த கடுவெளி கிராமத்தைச் சேர்ந்த சதீஸ், விக்னேஷ், அன்பரசு, பால வைரவன், சக்திதாசன் உள்ளிட்டோருக்கும் வினோத் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து, சதீஸின் தந்தை கந்தசாமி, சித்தாலத்தூர் சென்று, அங்குள்ளவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதனால், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த கந்தசாமி, திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து, எடையூர் காவல் நிலையத்தில் கந்தசாமி கொடுத்த புகாரின்பேரில் வினோத், குமாரசாமி, சுந்தரராஜன், ராஜ்மோகன், சக்திவேல், முருகானந்தம் உள்ளிட்ட10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வினோத், குமாரசாமி, சுந்தரராஜன் ஆகிய மூவரை புதன்கிழமை கைது செய்தனர்.
இதேபோல், வினோத் கொடுத்த புகாரின்பேரில் சதீஸ், விக்னேஷ், அன்பரசு, சக்திதாசன், பால பைரவன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அன்பரசு மற்றும் சக்திதாசன் ஆகிய இருவரை கைது செய்தனர்.