கூத்தாநல்லூரில் திமுக, அமமுக வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பு
By DIN | Published On : 07th January 2019 05:39 AM | Last Updated : 07th January 2019 05:39 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டி கே. கலைவாணன் ஞாயிற்றுக்கிழமை தொகுதிக்குள்பட்ட கூத்தாநல்லூர் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, கூத்தாநல்லூர் வந்த அவரை திமுக நகர செயலர் எஸ்.எம். காதர்உசேன், நகர அவைத் தலைவர் பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு
அளித்தனர்.
தொடர்ந்து, நகர திமுக அலுவலகத்திலிருந்து முன்னாள் அமைச்சர் மதிவாணன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை உறுப்பினர் ஆடலரசு, புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்குச்
சேகரிப்பில் ஈடுபட்டார்.
அமமுக வேட்பாளர்
இதேபோல், திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற வைத்தால் கூத்தாநல்லூரின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வேன் என்று அமமுக வேட்பாளர் எஸ். காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் எஸ். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை கூத்தாநல்லூரில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது பேசியது: அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் இந்த ஊருக்கு நன்கு அறிமுகமானவர். அமமுக சார்பில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்தால் கூத்தாநல்லூரை சின்ன சிங்கப்பூர் என வழக்கத்தில் சொல்லுவது போல், உ ண்மையாகவே சின்ன சிங்கப்பூராகவே மாற்றுவேன். பழுதடைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தை புதுப்பித்து, கூத்தாநல்லூரிலிருந்து தஞ்சை, திருவாரூர், வடபாதிமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட மற்ற ஊர்களுக்கு பேருந்துகளை இயக்கி வைத்து போக்குவரத்துப் பிரச்னையைத் தீர்த்து, கூத்தாநல்லூர் நகராட்சி வளர்ச்சியடைய வழி வகை செய்வேன். பூட்டியே கிடக்கும் ரேடியோ பூங்காவைப் பராமரிப்பு செய்து, வயதானவர்களும், குழந்தைகளும் அந்தப் பூங்காவுக்கு சென்று பயன்பெறும் வகையில் புதுமையான பூங்காவாக மாற்றுவேன். லெட்சுமாங்குடி - திருவாரூர் பிரதான சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றியமைத்து, பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட யாருக்கும் இடையூறு இல்லாதபடி, புதுவகையான பாலத்தைக் கட்டி,போக்குவரத்து நெரிசலைப் போக்குவேன் என்றார் எஸ். காமராஜ். பிரசாரத்தின்போது, நகர செயலர் சின்ன அமீன், எம்.ஜி.ஆர்.மன்ற நகர செயலர் பெரியஅமீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.