பொங்கல் பண்டிகை வருவதால் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது
By DIN | Published On : 07th January 2019 05:34 AM | Last Updated : 07th January 2019 05:34 AM | அ+அ அ- |

பொங்கல் பண்டிகை வருவதால் தற்போது தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என மக்களவை துணை சபாநாயகர் எம். தம்பிதுரை தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதால், இப்போது தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது. திமுக ஆட்சியில் பென்னாகரம் இடைத் தேர்தல் அறிவித்தபோது, பொங்கல் பண்டிகை காலம் என்பதால், அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கலாம். தேர்தலை அறிவித்துவிட்டு, இப்போது கருத்துக் கேட்பது தேவையற்ற ஒன்று.
திருவாரூர் மாவட்டம் கஜா புயலால் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. நிவாரணப் பணிகளை அரசு செய்து வருகிறது. அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் தேர்தலையும் நடத்தலாம், நிவாரணத்தையும் வழங்கலாம் எனக் கூறுவது சில பிரச்னைகளை உருவாக்கும்.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக அமோக வெற்றி பெறும். கடைசி நேரத்தில் வேட்பாளர் அறிவிப்பதுதான் அதிமுகவின் வழக்கம். வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாலேயே அதிமுக சார்பில் போட்டியிட 52 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
கர்நாடகத்தில் பாஜக, ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து மேகதாது அணை கட்ட முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ரஃபேல் விவகாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து நாடகம் ஆடி வருகின்றன என்றார்.