உபயவேதாந்தபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 14th June 2019 07:37 AM | Last Updated : 14th June 2019 07:37 AM | அ+அ அ- |

நன்னிலம் அருகேயுள்ள உபயவேதாந்தபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர் ஒருவரால் கட்டப்பட்டது உபயவேதாந்தபுரம் பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி பூதேவி உடனுறை வரதராஜப் பெருமாள் கோயில். இக்கோயில் திருக்கண்ணபுர தலத்துக்கு அபிமான தலமாகும்.
காலப்போக்கில் உபயவேதாந்தபுரத்தில் வசித்தவர்கள் பலர், வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில், கோயில் பூஜைகள் சரிவர நடைபெறாமல், கோயில் கட்டடங்களும் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்தன.
இதையடுத்து, அப்பகுதியில் மழை இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போனதால், ஊர் மக்கள் ஒன்று கூடி கோயில் புனருத்தாரணம் செய்து மீண்டும் நித்ய கால பூஜைகள் செய்வது என தீர்மானித்தனர். அதன்படி, கோயில் திருப்பணிகள் செய்ய தொடங்கி முடிக்கப்பட்டன.
திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து, வியாழக்கிழமை மஹா கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுத்து, அதற்கான யாகசாலை பூஜைகள் ஜூன் 9-ஆம் தேதி தொடங்கின. இதையடுத்து, வியாழக்கிழமை காலை மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது.
பின்னர், கடங்கள் புறப்பாடு தொடங்கி, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.