தியாகராஜர் கோயில் தெப்பத் திருவிழா இன்று தொடக்கம்
By DIN | Published On : 14th June 2019 07:36 AM | Last Updated : 14th June 2019 07:36 AM | அ+அ அ- |

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சப்த விடங்க தலங்களுள் முதன்மையானதாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோயில். அந்த கோயிலுக்குரிய கமலாலயக் குளம் பல்வேறு சிறப்புகளை உடையது. சிவபெருமான் யாகம் செய்தபோது யாகக் குண்டமாக விளங்கியது இந்த கமலாலயக் குளமே. இத்திருக்குளத்தில் நீராடுவோருக்கு பன்னிரு மகாமகத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த கமலாலயக் குளத்தில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா, இன்னிசை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு தெப்பத் திருவிழா தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் பார்வதி கல்யாணசுந்தரர், தெப்பத் திருநாள் மண்டபத்துக்கு பிரவேசம் செய்கிறார். இதையடுத்து இரவு 7 மணிக்கு மேல் தெப்ப உத்ஸவம் தொடங்குகிறது. தெப்ப உத்ஸவத்தில் சங்கீத சிரோன்மணி சந்தீப் நாராயண் குழுவினர், நாத கலாரத்னா சுகநாத திலகம் திருவாரூர் டி.எஸ். நடராஜசுந்தரம், டி.எஸ். சரவணன் குழுவினரின் இசைக் கச்சேரி நடைபெறுகிறது.