பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்ய சரியான தருணம்: வேளாண் அதிகாரி தகவல்

பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்ய தற்போது சரியான தருணம் என்று வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்ய தற்போது சரியான தருணம் என்று வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் அதிகளவில் நெற்பயிர் முதன்மைப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2 அல்லது 3 பருவங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யும்போது, மண்ணில் உள்ள ஊட்டச் சத்துக்கள் குறையும். இதை செயற்கை உரங்களை கொண்டு ஈடு செய்தாலும், மண்ணின் தன்மைகளான அங்கக பொருட்களின் அளவு மற்றும் மண் கட்டமைப்பு போன்றவை மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு சரியான தீர்வு பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்து அதை நிலத்துக்கு உரமாக்குதலே சிறந்தது ஆகும். 
பசுந்தாள் உரம்: தக்கைப்பூண்டு, சித்தகத்தி, மணிலா அகத்தி, சணப்பு கொளுங்சி, நரிப்பயறு போன்றவை முக்கியமான பசுந்தாள் உரப்பயிர்களாகும். இந்த பசுந்தாள் உரம் குறைந்த செலவில் கிடைக்கிறது. மேலும் மகசூல் உற்பத்திக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இந்த பசுந்தாள் உரத்தை இரு வழிகளில் பெறலாம். பசுந்தாள் பயிர்களை வளர்ப்பதன் மூல மோ அல்லது தரிசு நிலம், வயல் வரப்பு காடுகளில் வளரும் மரங்களிலிருந்து எடுக்கப்படும் பசுந்தழைகளின் மூலமோ பெறலாம்.
பசுந்தழை  உரம்: பசுந்தழை  உரம் என்பது வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட இலைகள், மரங்களின் தழைகள், புதர் செடிகளின் இலைகளை சேகரித்து மண்ணில் சேர்ப்பதாகும். காட்டு மரங்களின் இலைகள் தான் பசுந்தழை உரத்தின் முக்கிய  மூலதனம். பயிரிடப்படாத நிலங்கள், வயல் வரப்பு மற்றும் வேறு இடங்களில் வளர்க்கூடிய செடிகளும் பசுந்தழைகளும் எருவிற்கான மற்றொரு ஆதாரம் ஆகும்.  பசுந்தழை  உரத்துக்கு முக்கியமான செடி வகைகள் கிளைரிசிடியா, வேம்பு, புங்கம், கொடிப்பூவரசு, எருக்கு மற்றும் புதர்செடிகள் ஆகும்.
பசுந்தாள் உரமிடுதலின்
குறிக்கோள்கள்: மண்ணில் தழைச்சத்தையும், அங்ககப் பொருள்களையும் நிலை நிறுத்துவதாகும். பயிர்களின் அறுவடைக் காலத்துக்கு பின் குறைவான மண் ஈரப்பதம் இருக்கும்போது அல்லது குறைந்த மழை அளவு உள்ள காலம், பசுந்தாள் பயிர்கள் வளர்க்கப்படுவதற்கு ஏற்ற பருவம் ஆகும். பசுந்தாள் உரப்பயிரில் பூச்சி மற்றும் நோய்த்தாக்கும் தன்மை குறைவாக இருக்க வேண்டும். அதிகளவு விதை உற்பத்தித்திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். கிழங்கு வகை விதைகளை தவிர்த்தல் நல்லது.
நன்மைகள்: பசுந்தழை  உரமிடுவதால், மண் அமைப்பு மேம்படும். நீர்ப் பிடிப்பு திறன் அதிகரிக்கும். மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்கும். பயிர்கள் எதுவும் பயிரிடப்படாத பருவத்தில் வளர்க்கப்படும் பசுந்தழை பயிர்களால் களைச்செடிகளின் வளர்ச்சி குறையும். காரத் தன்மையுள்ள மண்ணைச் சீர்திருத்துவதற்கு உதவுகிறது. மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து மண்ணில் உள்ள அங்கக சத்துக்களின் அளவை மண்ணில் அதிகரிக்கச் செய்து மண் வளத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com