இருள்நீக்கிப் பள்ளிக்கு சீர்வரிசையாக கல்வி உபகரணங்கள்
By DIN | Published On : 06th March 2019 05:31 AM | Last Updated : 06th March 2019 05:31 AM | அ+அ அ- |

மன்னார்குடி அருகே உள்ள இருள்நீக்கி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் கிராம மக்கள் சார்பில் சீர்வரிசைப் பொருள்களாக அண்மையில் வழங்கப்பட்டன.
இருள்நீக்கி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 60 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்களை வழங்குவதற்காக, கிராம பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.1.25 லட்சம் நிதி திரட்டப்பட்டது.
பின்னர், இந்த நிதியில் பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வாங்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலிலிருந்து பள்ளிக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெ. குமார் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி. ராஜேந்திரன், கிராம கல்விக்குழு தலைவர் கே. ரகுராமன், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர்கள் ஆர். சுப்பிரமணியன், எம்.மோகன் ஆகியோர் கல்வி உபகரணப் பொருள்களை, பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மைக்கேல்ராஜிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் கு. விஜயநிர்மலா, கே. பாலசரஸ்வதி, செ. பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G