100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 22nd March 2019 09:35 AM | Last Updated : 22nd March 2019 09:35 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி திருவாரூரில் வாக்காளர் விழிப்புணர்வு தொடர் நடை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலையொட்டி, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வட்டாரம் வாரியாக தேர்தல் வாசகங்கள் அடங்கிய கோலப்போட்டி, மனித சங்கிலி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், தேர்தல் விழிப்புணர்வு குறும்படம், கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்தொடர்ச்சியாக, திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுநல அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு தொடர் நடை பேரணி நடைபெற்றது.
பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த. ஆனந்த் தொடங்கி வைத்தார். புதிய ரயில் நிலையத்தில் தொடங்கிய பேரணி பனகல் சாலை, தெற்கு வீதி, துர்காலயா சாலை வழியாக விளமல் கல்பாலம் வரை சென்று நிறைவடைந்தது.
பேரணியில் சென்றவர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பங்கேற்றனர். இதில், கோட்டாட்சியர் முருகதாஸ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...